பக்கம்:கழுமலப்போர்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

85

அக்கருத்து எழவே, உறையூர்ப் பெருவழியில் சென்ற அவர் போக்கு, கழுமல நகர் நோக்கிச் செல்லும் நீண்ட வழியில் சென்றது. கழுமலப் போர்க் காட்சியைக் கண்டார். கலங்கிற்று அவர் உள்ளம். கண்கள் நீர் சொரிந்தன. அந்நெகிழ்ந்த உள்ளத்தோடு, தம் புலமை உணர்வையும் ஒன்று கூட்டினார். உருப் பெற்றன நாற்பது உயிரோவியங்கள். களவழி நாற்பது எனப் பிற்காலத்தவரால், தொகுத்து வரிசை செய்யப்பெற்ற அப்பாக்கள் நாற்பதும், நவில்தொறும் நயம் பயக்கும் நலம் உடையவாய் அமைந்தன.

உயிரோவியங்கள் நாற்பதும் எழுத்துருவம் பெற்றன. உடனே அவ்வேட்டோடு, புலவர் பொய்கையார் உறையூர் அடைந்தார். பொய்கையார் தன் பகைவன் நண்பர் என்பதைச் செங்கணான் நன்கு அறிவான். ஆயினும், அவன் உள்ளத்தில், வழிவழியாக வந்து ஊறிக் கிடக்கும் தமிழ்ப் பற்று, அவரை வரவேற்று, வழிபாடாற்றத் தூண்டிற்று. புலவர்க்குரிய பெருமையோடு வரவேற்றான். வழிநடை வருத்தம் தீர அவர் விரும்பும் உணவளித்து ஓம்பினான். புலவர்க்கு உடல் தளர்ச்சி போயிற்று. ஆனால், உள்ளத்தளர்ச்சி போகவில்லை. அது தீர்த்துக்கொள்ள வேண்டிய சமயத்தை ஆர்வத்தோடு எதிர்நோக்கி, அவன் அரண்மனையில் காத்துக் கிடந்தார்.

அரசியல் பணிகளை முடித்துக்கொண்டு, செங்கணான் புலவர் பக்கத்தில் வந்து அமர்ந்தான். உடனே புலவர் தம் கடமையைச் செயல்படுத்தத் தொடங்கிவிட்டார். ஏட்டை மெல்ல அவிழ்த்தார். ஒவ்வொரு பாட்டாகப் பாடிப் பொருள் உரைக்கத் தொடங்கினார். தமிழ் அறிந்தவன் செங்கணான், அதனால், அப்பாக்களில் பொதிந்து கிடக்கும் பொருட் சிறப்பு, சொற் சிறப்பு, ஒலிச் சிறப்பு ஆகிய நயங்களை நுகர்ந்து நுகர்ந்து இன்புற்றான். ஒவ்வொரு பாட்டும், அவன் உள்ளத்தில் ஊற்றெடுத்துப் பாயும் இன்ப வெள்ளத்தை அதிகப்படுத்திக்கொண்டே வந்தது. இறுதிச் செய்யுளைப் பாடி

க. போ. —6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுமலப்போர்.pdf/87&oldid=1360654" இலிருந்து மீள்விக்கப்பட்டது