பக்கம்:கழுமலப்போர்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

கொண்டுவரப்பட்டு இச்சிறையகத்தே அடைக்கப்பட்டுள்ளேன். இந்நிலை வந்துற்றும் என் உயிர் பிரிந்திலது. உயிரிழந்து போகாமை மட்டும் அன்று; அவ்வுயிரை மேலும் ஓம்ப, உண்ணுநீர் அல்லவோ வேண்டினேன். பாணர்க்கும் புலவர்க்கும் வாரி வாரி வழங்க வேண்டிய நான், அவ்வாறு வழங்கிய என் கைகளால், இச்சிறை காவலரை அல்லவோ இரந்து நின்றேன்; அந்தோ என் இழி நிலை இருந்தவாறு என்னே! என்னினும் இழிந்தாரும் இவ்வுலகில் இருப்பரோ! அத்தகையான் என்றும் பிறந்திருக்கமாட்டான். என் ஒருவனாலேயே இம்மண்ணிற்கு அம்மாசு உண்டாகிவிட்டது; இன்னும் என் உயிர் பிரிந்திலதே” என்றெல்லாம் எண்ணி எண்ணி ஏங்கிற்று அவ்வுள்ளம். அவ்வுள்ள உணர்ச்சிக்கு உருவளித்தது அவன் கை. அக்கருத்தெல்லாம் ஒன்று திரண்டு ஓர் அழகிய பாட்டாக இடம் பெற்றது ஏட்டில். ஏடு அவன் கையில் கிடந்தது. இறந்து வீழ்ந்தது அவன் உடல்.

சேரன் இறந்து வீழ்வதற்கும், செங்கணான் பொய்கையாரோடு சிறைக்கோட்டம் புகுவதற்கும் சரியாக இருந்தது. இருவரும் ஓடோடிச் சென்று, சிறைக் கதவைத் திறந்து கொண்டு உள் நுழைந்தனர். மன்னன் ஒருபால் வீழ்ந்து கிடந்தான். உண்ணுநீர்க்கலம் ஒருபால் உருண்டு கிடந்தது. கையில் ஏடு காட்சி அளித்தது. புலவர் ஏட்டை எடுத்தார். அவர் வாய் பாட்டைப் படித்தது :

“குழவி இறப்பினும், ஊன்தடி பிறப்பினும்
ஆள் அன்று’ என்று வாளின் தப்பார்;
தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்
மதுகை இன்றி வயிற்றுத் தீத்தணியத்
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்மரோ இவ்வுலகத் தானே?” —புறநானூறு : 74

மன்னன் மனத்தைப் புலவர் அறிந்து கொண்டார். அவன் மறைவு கண்டு அவர் மனம் மாறாத் துயர் உற்றது என்றாலும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுமலப்போர்.pdf/92&oldid=1360680" இலிருந்து மீள்விக்கப்பட்டது