பக்கம்:கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/11

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

11

சரோஜினி, மிருணாளினி, நளினி, சுகாசினி என்ற நால்வரும் பெண்களாவர்.

பூபேந்திரநாத் சட்டோ பாத்தியாயர், இரவீந்திரநாத் சட்டோபாத்தியாயர், ஹரீந்திரநாத் சட்டோ பாத்தியாயர் என்ற மற்ற மூவரும் ஆண்மக்களாவர். இந்த ஏழு பேருமே தந்தையின் அறிவாற்றலுக்கு அடையாளமாகப் பிற்காலத்தில் திகழ்ந்தார்கள்.

மூத்தப் பெண்ணான சரோஜினி மிகுந்த அறிவரசியாகக் காணப்பட்டார். பெற்ற தந்தையே ஓர் ஆசிரியரானதால், அதன் முழு எதிரொலியும் சரோஜினியிடம் தவழ்ந்தது. அதனால், நல்ல மாணவி என்ற நற்பெயரைப் பிற ஆசான்களிடமும் பெற்றார்.

வெந்தணலால் வேகாது; வெள்ளத்தாலும் அழியாது: கள்ளர்களாலும் களவாட முடியாது; கொடுக்கக் கொடுக்க கல்வி நிறைவுறுமே தவிர குறையாது என்ற நல்லுரைக்கு ஏற்றவாறு, சரோஜினியுடன் கல்வி கற்கும் மாணவிகளும் நற்கல்வியும், நற்புகழும் பெற்று மகிழ்ந்து தேர்ந்தனர்!

ஆரம்பக் கல்வி ஐதராபாத்தில் முடிந்ததும், அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு? என்ற பழமொழிக்கு சரோஜினியை ஆளாக்காமல், பொது அறிவு பெறத்தக்க வேறுபல கல்வி விஷயங்களையும் தந்தையே மகனுக்குக் கற்பித்து கல்வியாளியாக்கினார்.

‘விளையும் பயிர் முளையிலே' என்பதற்கேற்ப சரோஜினி இளமையிலேயே இயற்கையை ஊடுருவிப் பார்க்கும் நுண்ணறிவை இயற்கையாகப் பெற்றிருந்தார்! அவருடைய அந்த நுண்மான் நுழைபுல நோக்கு; அவருக்கு ஒரு கவிஞனாவதற்குரிய கற்பனையையும், காட்சியையும் வழங்கியது.