பக்கம்:கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/35

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

35

யர்கள் எல்லாம் மானரோஷத்துடன் மறப்போர் புரியும் பக்குவப்பட்டவர்களா? அல்லவே!

எனவே தாய்தாட்டின் மானம் பெரிதா? மனிதன் உயிர் பெரிதா? என்று எண்ணிய போர்க்கள விடுதலை வீரர்கள் அனைவரும் எந்தத் தியாகம் புரியவும் தயாராகி விட்டார்கள் என்பதை சரோஜினி கண்டார்.

இத்தகைய அடிமைகளை தம்மால் எவ்வாறு விடுதலை வீறு பெறச் செய்ய இயலும்? நம் கவிதைகளால் இந்திய மக்களின் விழுச்சியுற்ற தேகத்தில் எழுச்சியைப் பெற வைக்க இயலாதா? ஏன் இயலாது?

தாம் எழுதும் கவிதைகள் மூலமாகவே இந்தியர்களைப் போர் வீரர்களாக்க முடியும் என்று கருதி, விடுதலைக் கீதங்களைப் பாட ஆரம்பித்தார்; அந்தப் பாடல்கள் மக்கள் உள்ளத்தை கனற்களமாக்கியது.

கவிக்குயில் சரோஜினிதேவிக்கு முன்பே, மராட்டிய சிங்கமாகக் காட்சிதந்த விடுதலைப்போராளி, பால கங்காதர திலகர் பெருமான், ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போர் புரிந்து சிறைவாசமடைந்திருந்தார்.

ஏன் அவர் சிறைபட்டார் தன்னைவிட தாய் நாட்டு மானம் பெரிது என்று நம்பிய திலகா, 'சுயராஜ்யமே எனது பிறப்புரிமை; அதை நான் அடைந்தே தீருவேன்'! என்று, வீர முழக்கமிட்டதற்காகச் சிறை புகுந்தார். துன்புற்றார். கவிக்குயில் சரோஜினிக்கும் திலகர் பெருமான்-ஒரு விடுதலைப் போராட்டப் பாடமானார். அதனால், திலகர் சிறை மீண்ட பிறகு, அவரைச் சந்தித்து சுதந்திரப் போராட்டத்திற்கான உத்வேகத்தைப் பெற்றார் கவிக் குயில் சரோஜினிதேவி.

திலகர் பெருமானைச் சந்தித்ததற்குப் பிறகு, கவியரசி, காந்தியடிகளின் அரசியல் குருவான கோபால கிருஷ்ண கோகலேயைச் சந்தித்தார்.