பக்கம்:கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/42

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

கவிக்குயில் சரோஜினியின்

பாடுவது மட்டுமே கவிஞன் கடமையல்ல; கவிஞர்கள் மக்களோடு மக்களாகப் பழகவேண்டும். வீதிகளிலும், சந்து முனைகளிலும், பொது மன்றங்களிலும், குப்பை மேடுகளிலும், களம் கண்ட போர் முனைகளிலும் கவிஞனது கால்கள் கடும் பயணம் புரிதல் வேண்டும்.

கவிஞன் என்பவன் யார்? தேசத்துக்கு அபாயம் வந்தால், நாடு அடிமைப்பட்டுக் கிடந்தால்; சோதனைகள் சமுதாயத்துக்குச் சூழ்ந்தால், மக்களிடம் சோர்வும், தோல்வியும், தைரியமின்மையும் ஏற்பட்டால்-அந்தந்தக் காலங்களில் நன்மை தீமைகளை அறிந்து பாடுபவன் அல்லவா கவிஞன்?

நன்மைகளை நாட்டி, தீமைகளை ஓட்டி, ஊமைகளை பேசவைக்க, ஆமைகளை வேகமாக நகரவிட ஏழைகளை கோழைகளை, மோழைகளை, பாழைகளை, கூழைகளை வீரர்களாக்கிட கவிஞன் உணர்வுகளும், கனற் கருத்துக்களும் யாரிடமிருந்து பூகம்பம் போல் வெடித்து வெளி வருகின்றதோ அவனல்லவா கவிஞன்?

பாரத நாட்டில் அடிமைகளாக வாழ்கின்ற வாலிபர்களே, வீறிட்டு எழுங்கள்! விடியல் விடிகின்றது. தைரியம் பெற்றிட எழுங்கள்; மக்களை ஊக்குவிக்கும் தைரியம் இன்பம், ஆற்றலும் நம்பிக்கையும் உடைய ஒரு பெண் கவி நெஞ்சம் உங்களை அழைக்கின்றது?

இந்தியா, இன்றில்லாவிட்டாலும், நாளை, நாளை அல்லாவிட்டாலும் நாளைய மறுநாள் நிச்சயமாக பூரண விடுதலைப் பெற்றே தீரும் என்ற நம்பிக்கையில் மக்களைப் போராட தான் அழைக்கின்றேன்.

சுதந்திரப் போராட்டம் ஆங்காங்கே நாடு முழுவதுமாக தீவிரமாக நடைபெற்று வருவதை நீங்களும் அறிவீர்கள்.