பக்கம்:கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/68

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

கவிக்குயில் சரோஜினியின்

ஜெனரல் ஹெரிட் ஜாக், கர்னல் கிரேஸ்வெல் போன்ற உயர் அரசு அதிகாரத் தலைவர்களும், மக்களும் பெருங் கூட்டமாகக் கூடி சரோஜினியின் பேச்சைக் கேட்டார்கள். கூட்டத்திற்கு தலைமை வகித்த அந்த ஐரோப்பியர், கவிக்குயில் அறிவாற்றலையும், 'நா' நயத்தையும் நாட்டுப் பற்றையும் வெகுவாகப் பாராட்டினார். ஆனால் ஒன்று!

டர்பன் டவுன்ஹால் கூட்டத்திற்குத் தலைமை வகித்த வெள்ளைக்கார உதவி மேயர் டாக்டர் கில்பர்ட் என்பவர், கவிக்குயில் சரோஜினிதேவியை மேடையிலே பேசும்போது சூதாக, வஞ்சமாக, சாமர்த்தியமாக, சாதுர்யமாக பேச்சு மூலமாகவே ஒரு கேள்வியைக் கேட்டு மடக்கிடப் பார்த்ததே-அந்த ஒன்று!

என்ன கேள்வி அது என்று உங்களுக்குக் கேட்கத் தோன்றுகிறது அல்லவா? இதோ அவர் கேட்கிறார்:

"சரோஜினி நாயுடு அவர்களே, நீங்கள் 'சமத்துவம்' 'சமத்துவம்' என்று பேசுகிறீர்களே அந்த 'சமத்துவம்' என்ற சொல்லின் பொருள் என்ன?" என்று கேட்டது தான் அக்கேள்வி: மேலும் அந்த உதவி மேயர்:

"சமத்துவம் என்றால் ஆனைவருக்கும் நன்மை புரிவதும், உதவுவதும், ஏழை எளியவர்களுக்கு ஏற்றம் அளிப்பதும் சமத்துவம் அல்லவா? வெள்ளைக்காரர்களாகிய நாங்கள் உலகம் முழுவதும் செய்துவரும் ஜீவகாருண்யம் உங்களுக்குத் தெரியாதவையா?”

"நாங்கள் சமத்துவத்தை மறுப்பதாக மக்களிடம் உண்மையைத் திரித்துக் கூறி, இந்திய மக்களுக்கு ஆத்திரம் உண்டாக்கி, முன்னரே உள்ள மக்களது மனஸ்தாபங்களுக்கு ஏன் தூபம் போடுகிறீர்கள்?" என்று கேட்டார் அந்த உதவி மேயர் நமது கவியரசியை நோக்கி!

இவ்வாறு அந்த உதவி மேயர் ஏன் பேசினார்? அதுவும் கவிக்குயிலை நேராகவே வைத்துக்கொண்டு முகத்துக்கு