பக்கம்:கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5

ஒட்டக்கூத்தர்

தமிழ் இலக்கிய வரலாற்றில் பொற்காலம் என்று போற்றப்படும் காலங்கள் இரண்டாகும். ஒன்று சங்க காலம்; பிறிதொன்று பிற்காலச் சோழர் காலமாகும். சங்க காலத்தில் வாழ்ந்த மக்கள் நல்ல இலக்கியச் செல்வத்தினைப் பெற்று வாழ்ந்தனர் என்பது பத்துப்பாட்டு எட்டுத்தொகை முதலிய பழந்தமிழ் இலக்கியங்களால் தெரியவருகின்றது.

நேரிழை மகளிர் உணங்குணாக் கவரும் கோழி யெறிந்த கொடுங்காற் கணங்குழை பொற்காற் புதல்வர் புரவியின் றுருட்டும் முக்காற் சிறுதேர் முன்வழி விலக்கும்.[1]

“குழைகொண்டு கோழி யெறியும் வாழ்க்கைய ரென்றவழி, கோழி யெறிவாரென்று ணராற்பால தன்று; ஒன்றானும் முட்டில் செல்வத்தாரென்றவாறு.”[2]

சுள்ளியம் பேரியாற்று வெண்நுரை கலங்க யவனர் தந்த வினைமாண் நன்கலம் பொன்னொடு வந்து கறியொடு பெயரும்.[3]

முதலான சங்க இலக்கியத் தொடர்களும், உரையாசிரியர்தம் விளக்கமும் மக்களின் வளமான செல்வ வாழ்வினைப் புலப்படுத்துவனவாகும்.


  1. பட்டினப்பாலை, 22–25.
  2. நன்னுால் நூற்பா, 407, மயிலைநாதருரை.
  3. அகநானூறு, 149, 7-10.