பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/117

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கோழியும், ஆடும், மாடும்,
கூடவே எருமை, கன்றும்,
மேழியும் கலப்பை தாம்பும்,
மென்மேலும் பெருகி, ஊரில்
தோழியும் பாங்க னாகித்
தொடர்ந்துவந் துழைத்தால் செல்வம்
நாழியும் பேழை தானும்
நாமளந் திடப்போ தாதே!

தாழியும் எருமை மாடாய்த்
தழைத்ததங் கிரண்டோர் வீடு!
வாழையும் தென்னை யாகி
வளர்ந்தங் கிரண்டோர் வீடு!
மேழியும் எருது மாகி
மேலோங்கிற் றிரண்டோர் வீடு!
'ஊழையும் உழைத்துக் காண்போம்
உப்பக்கம்’ என்ற துாரே!

காடுகள் தோட்ட மாகக்
கரும்புநெல் விளைவு மாகப்
பாடுகள் பணமு மாகப்
பால்பழம் உணவு மாக
ஏடுகள் கூட மாக
இதயங்கள் இன்ப மாக,
வீடுகள் அனைத்தும் ஏக
போகமாய் விளங்கிற் றுரே!

120