பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/138

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பழுத்தநற் புலவர் தங்கள்
பட்டறி வதனைப் பற்றி
வழித்துணை யாக மக்கள்
வாழ்க்கையில் வழங்கு மாறே
அழுத்தமும் திருத்த மாயன்
றழகுற அமைத்த நூல்கள்
எழுத்தியல் பறிக்தோர்க் கெல்லாம்
எளிதாதல் இயல்பே யாகும்.

புல்லறி வெல்லாம் மெல்லப்
போமாறு பயின்று, போதும்
நல்லறி வுற்றா ரேனும்,
நயம்படத் திறனாய் வுற்ற
தொல்லறி வுடையோர் தம்பால்
தொடர்ந்திருந் தமைதி யாகச்
சொல்லறி வதனைப் பெற்றால்
சுத்தமாய்க் கற்றோ ராவர்.

இருளுணர் வாயி ருக்கும்
இளமையில் எழுத்தும் சொல்லும்
மருளுணர் வறவே நன்கு
மனமூன்றிக் கற்றும் கேட்டும்
அருளுணர் வாகி உள்ளம்
அறம்பொருள் இன்பம் வீடாம்
பொருளுணர் வடைந்தா லன்றிப்
புலன் செம்மை யடைந்தோ ராகார்.

141