பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/139

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



வினைப்பய னென்னும் சொல்லை
விதிப்பய னாக மாற்றிப்
பனைப்பரு மன்துன் பத்தைப்
பாரினில் விளைத்து, நம்மைத்
தினைப்பரு மன்நன் றீயாத்
தெளிவற்ற சடங்கின் மூலம்
நினைப்பருஞ் செலவு வைத்தே
நிலைகுலைக் கின்ற நூல்கள்,

மதமெனும் சொல்லில் உள்ள
மதிப்பான பொருளை மாற்றி,
நிதமுழைத் துடலும் தேய
நீண்டநாள் சேர்த்த காசை
விதமுறப் பசனை பூசை
விழாக்களில் விரய மாக்கிப்
புதுமுறைத் துயரம் தன்னில்
புகுத்திடும் புத்த கங்கள்,

பற்பலர் பாடி வைத்தார்
பன்னூற்றுக் கணக்கி லேனும்,
சொற்பொருள் விளக்க மாகச்
சுவைபடச் சுருங்கி, மக்கள்
கற்பதற் கேற்ற வைநம்
கடைச்சங்க நூற்கள்; கற்று
நிற்பது கடைப்பி டித்தல்
நெறிமுறை தமிழர்க் கென்பர்!

142