பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/14

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முதற்கார ணன்தா னென்னும்
முக்கண்ணன் கிரிக்கு நீதான்
எதற்காகச் செல்ல லுற்றாய்?
என்பதை விளக்கிச் சொல்.நான்
அதற்கான வகையை யுன்னி
அவசிய மாயின் உன்னோ
டிதற்காக வருகின் றே"னென்
றியம்பினான் கவிஞ ரேறே.

நாகப்பன் சினமும், கடிந்த சொல்லும்
'எப்போதும் புதிய நூல்கள்
எழுதியே காலம் தள்ளும்
அப்பாவிக் கவிஞ னென்றே
அன்புடன் அழைக்க வந்தால்,
துப்பாக்கிக் குண்டைப் போலத்
துளைக்கின்றான் சொற்க ளாலே!
தப்பாயிற் றப்பா! வென்று
தான்கொதித் தான்நா கப்பன்.

சுத்தத்தில் சுதந்த ரத்தில்
சுகவாழ்வில் சூர னேனும்,
மொத்தத்தில் நாகப் பன்தான்
முழுமுட னான தால்,சொல்
யுத்தத்தில் கவிஞ னுள்ளம்
உறுத்திடத் தக்க தாகச்
சித்தத்தில் சினத்தைச் சேர்த்துச்
சீறியோர் வார்த்தை சொல்வான்.

13