பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/6

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



கவிஞன்

ஒன்று

கவிஞன் துயிலுணர்தல்
கவினுற உதித்தான் வானில்
கதிரவன்; கங்குல் அஞ்சிப்
புவிதனை விரைந்து விட்டுப்
போயிற்று, புகலை நாடி;
செவியினில் ‘தீந்தேன்’ என்னச்
சிறுகுயில் இசைக்க மெல்லக்
கவிஞன்கண் மலர்ந்தான் செய்ய
கமலங்கள் மலர்ந்த வாறே.

வெண் பட்டு விரித்த தேபோல்
வெயில் ஒளி விரியக் கண்டு,
'விண் பட்ட பரிதி என்ன
விளங்குக உண்மை! எங்கும்
மண்பட்ட மக்கள் வாழ்வு
மலரென மலர்க!' என்றே
பண்பட்ட கவிஞன் வாழ்த்திப்
படுக்கையை விட்டெ ழுந்தான்.

5