பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/71

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அம்மையும் அப்ப னாகி
அவனியைக் காப்போர் நீரே!
இம்மையும், மறுமை தானும்
ஈந்திட வல்லோர் நீரே!
எம்மைஎப் பிறப்பி னுக்கும்
ஈறும்நீர் முதலும் நீரே!
உம்மைநீர் உணர்ந்தால் இந்த
உலகத்தில் உயர்ந்தோர் நீரே!

உழுவோர் தம்நிலை உணராதிருத்தலைக்கூறல்
 
உழுவோரே! உம்மை நீரே
உணராத கார ணத்தால்
அழுவோரும் ஆனீர்! அந்தோ!
அடிமையைக் கண்டும் அஞ்சித்
தொழுவோரும் ஆனீர்! வாழ்வும்
தொல்லையால் சூழப் பட்டே
விழுவோரும் ஆனீர் வீறுற்
றெழுவிர்நீர் இனிமே லேனும்!

கோவில்களாலும் மடங்களாலும் நேர்ந்த இழப்பு

'உண்டியைக் கொடுத்தோர் யார்க்கும்
உயிர்கொடுத் தோர்கள்’ என்று
பண்டைநம் புலவர் ஆய்ந்து
பகர்ந்ததை மறந்து விட்டுக்
கொண்டையூ சிக்கொப் பான
குருக்களின் சொல்கேட் டுக்கல்
குண்டினைத் தெய்வம் என்றே
கும்பிட்டுக் கடையர் ஆனோம்.

72