பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/80

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



ஆளியொத் துடலில் கட்டும்
ஆண்மையும் துணிவும் உள்ள
காளியைக் கூர்ந்து நோக்கிக்
கணப்பொழு திருந்து நந்தன்,
மீளவும் சொல்வான்: ‘'இந்த
மேதினிப் பசிநீக் கற்குன்
தோளினில் உள்ள சக்தி
தொழில்பட வைப்பாய்,” என்றே.

"எள்ளுடு விதைக்கக் கூட
என்றென்றும் இயலா தாகி
உள்ளோடி எருமை மாடென்
றெதுவொன்றும் ஊரா வாறு,
முள்ளோடு புதர்கள் மண்டி
முக்காணி நிலமுண் டையா!
வெள்ளாடு மட்டும் உண்டேல்
விசனம்தீர்ந் திருப்பேன்,” என்றான்.

"வீணாக உலர்ந்து வீழும்
வேலிக்கால் தழையை மேய்ந்தே
வாணாட்கள் முழுதும் நல்ல
வளமான குட்டி யீன்றும்,
ஊணாக ஊனைத் தந்தும்,
உரம்தந்தும், உடைமை தந்தும்
பேதை விதமாய் நம்மைப்
பேணும்வெள் ளாடு கண்டாய்!

81