பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/94

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

          சூழ்ச்சி தோல்வி உறுதல்
          காவேரி பெருகிப் பொங்கிக்
          கரைபுரள் வதுபோல் பொன்னன்
          நாவார வந்த இந்த
          நன்மொழி கேட்டு, நெஞ்சம்
          நோவேறி நாகப் பன், தன்
          நோவதை மறக்க எண்ணித்
          தேவாரப் பாடல் ஒன்றைத்
          'தேன்' என இசைக்க லானான்.

          திருடர்க்கு மறைந்தி ருக்கத்
          திருவேடம் உதவும்; பாவம்!
          குருடர்க்குச் சோறு தின்னக்
          குகன் நாமம் உதவும்; நல்ல
          முரடர்க்கு மனநோய் தீர்க்க
          முறைப்பாடல் உதவும்; பெண்டிர்
          புருடர்க்குச் சொர்க்கம் ஈயப்
          பொற்கோவில் உதவும் போலும்!

          'எப்பற்றும் அற்றவ் வானில்
          இருந்தெழில் நிலவைக் காலும்
          ஒப்பற்ற சுடர்வெண் திங்கள்
          ஒத்தொளி செய்தின் றூரில்
          தப்பற்றுத் தருமம் காத்துத்
          தம்பிவாழ் கின்றான்' என்று
          செப்புற்ற மொழியைக் கேட்டுச்
          செவிசிந்தை அனைத்தும் வெந்தான்.

95