பக்கம்:கவிஞர் கதை.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

கவிஞர் கதை




இருக்கிறதே!” என்று சங்கப் புலவர் கூறி, ஏட்டை எடுத்து வரும் படி சொல்வார். அப்போதுதான் எழுதி முடிந்திருந்த சுவடியை உள்ளே இருந்து எடுத்து வந்து காட்டுவார்கள். இதற்கென்றே, எழுதாத பழைய வெற்றேடுகளை வைத்திருந்தார்கள். புதிதாகக் கவிகளை எழுதியிருந்தாலும் பழைய சுவடியைப்போல இருக்கும். வந்த புலவர் அதைப் பார்த்துப் பிரமித்துவிடுவார். ‘இது என்ன குட்டிச்சாத்தான் வேலையாக இருக்கிறதே!’ என்று எண்ணி ஒன்றும் சொல்ல முடியாமல் போய்விடுவார்.

இப்படி அடிக்கடி சங்கத்தில் நடந்து வந்தது. வெளியூரில் இருந்த புலவர்கள், இந்த நிகழ்ச்சியைக் கண்டு மிகவும் வருத்தம் அடைந்தார்கள். இந்த அக்கிரமத்தை எப்படி நிறுத்துவது என்று எண்ணி எண்ணிச் சோர்ந்து போனார்கள்.

அப்போது அவர்களுக்கு இடைக்காடர் என்ற புலவருடைய நினைவு வந்தது. அவர் கடவுளுடைய அருள் பெற்றவர். சிறந்த புலவர். மற்ற மனிதர்களால் செய்ய முடியாத அற்புதமான காரியங்களைச் செய்கிறவர். அவரை இடைக்காட்டுச் சித்தர் என்றுகூடச் சிலர் சொல்வதுண்டு.

இடைக்காடரிடம் புலவர்கள் போனார்கள். சங்கத்தில் நடைபெறும் அக்கிரமத்தை எடுத்துச் சொன்னார்கள். “எப்படி யாவது நீங்கள் இதை நிறுத்த வழி பண்ணவேண்டும்” என்று வேண்டிக்கொண்டார்கள். இடைக்காடர் அப்படியே செய்வதாக ஒப்புக்கொண்டார்.

ஒரு நாள் இடைக்காடர் மதுரைக்குப் போனார். தமிழ்ச் சங்கத்துக்குப் போய், தாம் ஒரு நூலை இயற்றியிருப்பதாகவும், அதை அரங்கேற்ற வந்திருப்பதாகவும் சொன்னார், அவர், இறைவன் அருள் பெற்றவர் என்பது புலவர்களுக்குத் தெரியும். ஆதலால் அவரைக் கண்டவுடனே அவர்களுக்கு மனசுக்குள் கொஞ்சம் நடுக்கம் எடுத்தது.

இடைக்காடர் பாட்டைச் சொல்ல ஆரம்பித்தார். வந்தவர்கள் பாடப்பாட யாரோ வேகமாக அதை எழுதிக்கொள்கிறார்கள் என்று இடைக்காடர் தெரிந்துகொண்டார். அவர்கள் எழுத முடியாதவகையில் பாட்டுப் பாடவேண்டும் என்பது அவர் எண்ணம். எவ்வளவு வேகமாகச் சொன்னாலும் எழுதுகிறவர்கள் எழுதி விடக்கூடும். ஆகையால் வேகமாகச் சொல்வதில் பயன் இல்லே. எழுத முடியாத ஒலிகளைப் பாட்டில் இணைத்துப் பாடினால் அவர்களால் எழுத முடியாது என்று அவருக்குத் தோன்றியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞர்_கதை.pdf/18&oldid=1525698" இலிருந்து மீள்விக்கப்பட்டது