பக்கம்:கவிஞர் கதை.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உயிர் காத்த கோவூர்கிழார்

திருக்கோவலூர் என்று ஒர் ஊர் திருவண்ணாமலைக்குப் போகிற வழியில் இருக்கிறது. பழைய காலத்தில் அது ஒரு சிறிய நாட்டுக்குத் தலைநகராக இருந்தது. காரி என்ற வள்ளல் அந்த நாட்டுக்குத் தலைவனாக விளங்கினான். அந்த நாட்டுக்கு மலையமான் நாடு என்று பெயர். மலையமான் என்பது, அதை ஆளும் தலைவனுக்குப் பெயர். காரியை மலையமான் திருமுடிக்காரி என்று சொல்வார்கள்.

அவனுக்கு உள்ளது சிறிய நாடுதான்; ஆனாலும் சேர சோழ பாண்டிய நாட்டுப் பொருளெல்லாம் அவனைத் தேடி வரும். எப்படி என்று கேட்கிறீர்களா? சொல்கிறேன்.

காரி பெரிய வீரன். அவனிடம் மிகவும் பலசாலிகளான வீரர்கள் பலர் இருந்தார்கள். அவர்கள் யாவருமே காரியின் சொல்லை மீறாதவர்கள். அந்தப் படை எங்கே போர் செய்யப் போனாலும் வெற்றிதான்.

காரிக்குப் பகைவர் யாரும் இல்லை. ஆனாலும் அவன் அடிக்கடி தன் படையுடன் போரில் ஈடுபட்டிருப்பான். சேர சோழ பாண்டியர்கள் எப்போதேனும் யாருடனாவது போர் செய்ய வேண்டியிருந்தால், தங்கள் கட்சிக்கு உதவி செய்ய வேண்டும் என்று காரியை வேண்டிக்கொள்வார்கள். அவன், தன் படையுடன் சென்று, அவர்களுடைய படையுடன் சேர்ந்து, போர் செய்வான். நிச்சயமாக அவன் சேர்ந்திருக்கும் கட்சிக்குத் தான் வெற்றி உண்டாகும். இந்த உண்மையைத் தமிழ் நாட்டு அரசர்கள் யாவரும் உணர்ந்திருந்தார்கள். போர் முடிந்து, வெற்றி பெற்ற பிறகு, தமக்கு அந்த வெற்றியை வாங்கித் தந்த பெருவீரனாகிய மலையமானுக்கு, அவன் உதவியைப் பெற்ற அரசன், பொன்னும் பொருளும் யானையும் குதிரையும் தேரும் வழங்குவான். பகைவரிடமிருந்து பெற்ற பொருளிலும் பங்கு கொடுப்பான். மலையமான் பெரிய அரசனைப் போன்ற செல்வத்தோடு வாழும் அளவுக்கு அவனுக்குப் பொருள் கிடைத்தது.

ஆனால் அவன் என்ன செய்தான் தெரியுமா? தமிழ்ப் புலவர்களிடத்திலும் இசைவாணர்கள் இடத்திலும் அவனுக்கு அளவற்ற அன்பு. அவன் போர்செய்யாத காலமெல்லாம் எப்போதும் புலவர்கள் தன்னைச் சூழ, இருப்பான். அவர்களுடைய கவிகளைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞர்_கதை.pdf/26&oldid=1525740" இலிருந்து மீள்விக்கப்பட்டது