பக்கம்:கவிஞர் கதை.pdf/3

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



கவிஞர் கதை


ஒளவைப் பாட்டி

ஒளவைப்பாட்டி என்று சொன்னாலே ஒரு கிழ உருவம் உங்கள் மனக்கண்முன் தோன்றும். தமிழிலே அந்தப் பாட்டி பாடிய பாட்டுக்கள் பல உண்டு. நீங்கள் பள்ளிக் கூடத்தில் வாசிக்கிற ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நல்வழி இவையெல்லாம் அந்தப் பாட்டி பாடியவைகளே. ஆனால் அந்தப் பாட்டிக்கு முன்பே மற்றோர் ஒளவை இருந்தாள். அவளும் புலமை நிரம்பியவள் தான்; இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன் இருந்தவள். மகா கெட்டிக்காரி. பெரிய பெரிய மன்னர்களெல்லாம் அந்த ஒளவையிடம் மதிப்பு வைத்திருந்தார்கள்.

அதிகமான் என்ற அரசன் ஒருவன் இருந்தான். அவன் தகடூர் என்ற ஊரில் இருந்து அரசாண்டுவந்தான். இப்போது சேலம் மாவட்டத்தில் தர்மபுரி என்ற ஊர் இருக்கிறது. அதைத் தான் அந்தக் காலத்தில் தகடூர் என்று சொல்லிவந்தார்கள். அதிகமான் புலவர்களிடம் மிகவும் பணிவுடன் நடந்துகொள்வான்; அவர்கள் பாட்டைக் கேட்டுக் களிப்பு அடைவான்; பரிசுகள் கொடுப்பான்.

ஒரு நாள் ஒளவை அதிகமானிடம் வந்தாள். அப்போது அதிகமான் ஒரு நெல்லிக்கனியைக் கையில் வைத்துக்கொண்டிருந்தான். அந்தக் கனியைத் தின்றால் உடம்புக்கு அதிகமான பலம் உண்டாகும். வியாதி ஒன்றும் வராது; பல ஆண்டுகள் வாழலாம். மிகவும் அருமையாகச் சம்பாதித்தது அது. அது அதிகமான் கைக்கு எட்டியது. ஆனால் ஒளவை வந்தவுடன் அவன் அதை அந்தப் பெருமாட்டியிடம் கொடுத்தான். அவளுக்கு அதன் பெருமை தெரியாது. ஆதலால் அதை உடனே வாயில் போட்டுத் தின்றுவிட்டாள்.

பிறகு அங்கிருந்தவர்களின்மூலம் அவள் அதன் அருமையையும் பெருமையையும் உணர்ந்தாள். “அடடா! இந்த விஷயம் முன்பே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞர்_கதை.pdf/3&oldid=1525642" இலிருந்து மீள்விக்கப்பட்டது