பக்கம்:கவிஞர் கதை.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

கவிஞர் கதை



குழந்தைகளைக் கொல்வது முறையாகாது’ என்று அரசனோடு நெருங்கிப் பழகுகிறவர்கள் எடுத்துரைத்தார்கள். அவன் சிறிதும் இாங்கவில்லை.

குழந்தைகளைக் கொல்ல நாள் குறித்தாயிற்று. கொலை செய்யும் யானையும் வந்துவிட்டது. புலவர் உலகத்திலும் இந்தச் செய்தி மெல்லப் பரவியது. எல்லோரும் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தனர்.

அக்காலத்தில் கோவூர் என்று சோழ மண்டலத்தில் உள்ள ஊரில் ஒரு பெரும் புலவர் வாழ்ந்துவந்தார். புலவர்கள் யாவரும் மதிக்கும் மாட்சி பெற்றவர் அவர் முடியுடைய மன்னர்கள் வணங்கும் தகுதி பெற்றவர். அவர் வந்து, வளவனுக்கு நல்லுரை கூறினால் ஒருகால் அந்த இளங்குழந்தைகள் உயிர் பிழைக்கும் என்ற எண்ணம் புலவர்களுக்கு உண்டாயிற்று. சில புலவர்கள் இந்தக் கொடுமையைக் கோவூர்கிழாரிடம் போய்ச் சொன்னார்கள். “நம் காரியின் குழந்தைகளையா கொல்லப் போகிறான்!” என்று திடுக்கிட்டவராய் அவர் உடனே புறப்பட்டுவிட்டார்.

இங்கே, கொலைக்களத்துக்குக் குழந்தைகளைக் கொண்டு சென்றனர். யானையைக் கொண்டுவர ஏற்பாடாகிவிட்டது. மக்கள் அங்கங்கே கூடிக் கூடி, “மகா பாபி! எதற்கும் அஞ்சாத கொடியவன்” என்று சோழனைத் துாற்றிக்கொண்டிருந்தனர்.

“கோவூர்கிழாருக்கு இந்தச் செய்தி போயிருக்கிறதாமே! அவர் வந்தால் சோழன் தன் மிடுக்கைத் தளர்த்துவான்” என்றார் சிலர்.

“அவர் ஊரில் இருந்து, சமயத்துக்கு வரவேண்டுமே!” என்று சிலர் சந்தேகத்தை எழுப்பினர்.

“அவர் வந்தால்தான் என்ன செய்வது? இந்த முரடன் இரங்குவானா?” என்று ஒருவர் கேட்டார்.

“என்ன அப்படிச் சொல்கிறீர்? கோவூர்கிழாராலே சாதிக்க முடியாத காரியமும் உண்டா? இந்தக் குழந்தைகளின் தலைச் சுழி நன்றாக இருந்தால் அவர் வருவார்” என்றார் மற்றொருவர்.

அப்போது புதிய ஆரவாரம் கேட்டது. “வந்துவிட்டார்: வந்துவிட்டார்!” என்று மக்கள் பேசிக்கொண்டார்கள். கோவூர் கிழாரே வந்துவிட்டார். அவர் முதலில் அரசனிடம் போகவில்லை. நேரே கொலைக்களத்துக்குச் சென்றார். அங்கே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞர்_கதை.pdf/30&oldid=1525752" இலிருந்து மீள்விக்கப்பட்டது