பக்கம்:கவிஞர் கதை.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உயிர் காத்த கோவூர்கிழார்

31



உயிரை வாங்கும் யானை முன்னே வந்து நின்றது. அதைக் கண்டவுடன் சிறிது அழுகை நின்றது. யானையைக் கண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டே நின்றார்கள். அடுத்த கணத்தில் தம் உயிரை முடிக்கப் போகும் அதை வேடிக்கை பார்த்தார்கள் என்றால் அந்தப் பிஞ்சு நெஞ்சம் எவ்வளவு மாசு மறுவற்றது. என்று நினைத்துப் பார். புலவர் உலகம் போற்றும் ஒருவனுடைய குழந்தைகள் என்பதை மறந்தாலும், பேதைப் பிள்ளைகளின் இளம் பருவத்தையாவது நினைத்துப் பார். அந்தக் குழந்தைகளையா யானைக்குப் பலி யிடுவது!”

அரசன் பேச முற்பட்டான். குரல் எழும்பவில்லை; கனைத்துக்கொண்டான். புலவர் வருணித்த காட்சி, அவன் மனத்தை உருக்கிவிட்டது. அதோடு இந்தச் செயலால் புலவர்களின் சாபம் தனக்கு வரும் என்ற அச்சமும் உண்டாயிற்று.

மெல்ல வந்தது வார்த்தை “தங்கள் உபதேசப்படி நடக்கிறேன். என் பிழையைப் பொறுக்க வேண்டும்” என்று கிள்ளி வளவன் கையைக் குவித்தான். உடனே உத்தரவு பறந்தது. கோவூர்கிழாரே மறுபடியும் ஓடினார். “என் கண்மணிகளே!” என்று அந்த இரண்டு குழந்தைகளையும் மார்போடு அணைத்துக் கொண்டார். அவருடைய இருதயம் அப்போது அடைந்த உவகையை அந்தக் குழந்தைகளால் அறிய முடியுமா!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞர்_கதை.pdf/33&oldid=1525759" இலிருந்து மீள்விக்கப்பட்டது