பக்கம்:கவிஞர் கதை.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உரை வகுத்த நக்கீரர்

துரையில் திடீரென்று பஞ்சம் வந்துவிட்டது. மழை பல காலமாகப் பெய்யவில்லை. பாண்டிய அரசன் பஞ்ச காலத்தில் உணவுப் பொருளைப் பகிர்ந்து கொடுக்க ஏற்பாடு செய்தான். அக்காலத்தில் அவன் மதுரையில் ஒரு தமிழ்ச் சங்கத்தை நடத்தி வந்தான். அதில் புலவர்கள் இருந்து தழிழாராய்ச்சி செய்து வந்தார்கள். அந்தப் புலவர்களுக்குப் பஞ்ச காலத்தில் வழக்கம் போல வேண்டிய வசதிகளைச் செய்து தர முடியாதோ என்று அவன் வருந்தினான். அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. ‘புலவர்கள் எங்கே போனாலும் சிறப்புப் பெறுவார்கள். இந்தக் கஷ்ட காலத்தில் நாமும் நம்முடைய குடி மக்களும் வசதிகளைக் குறைத்துக்கொண்டு வாழத்தான் வேண்டும். இவர்கள் வளமுள்ள நாட்டில் போய் வாழலாமே! பிறகு நாடு, மீட்டும் வளம் பெறும்போது நாம் அழைத்து வரலாம்’ என்று எண்ணித் தன் கருத்தைப் புலவர்களுக்குத் தெரிவித்தான். அவர்கள் அப்படியே வெவ்வேறு நாடுகளுக்குச் சென்றுவிட்டார்கள்.

பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்சம் நீங்கியது. உடனே, பாண்டியன் அங்கங்கே உள்ள புலவர்களுக்கு ஆள் விட்டு, அழைத்து வரச் செய்தான். மீட்டும் சங்கத்தை நடத்தி வந்தான். புலவர்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் வல்லவர்களாக இருந்தனர். தமிழ் இலக்கணத்தில் எழுத்து, சொல், பொருள் என்று மூன்று பெரும் பிரிவுகள் உண்டு. அவற்றில் பொருள் இலக்கணத்தில் அகப்பொருள் என்றும் புறப்பொருள் என்றும் இரண்டு பிரிவுகள். அகப்பொருள் இலக்கணத்தை நன்றாக ஆராய்ச்சி செய்து, புலவர் ஒருவரைக் கொண்டு, புது முறையில் ஓர் அகப்பொருள் இலக்கணத்தை இயற்றச் செய்ய வேண்டுமென்று பாண்டியன் எண்ணி யிருந்தான். ஆனால் அவ்விலக்கணத்தில் ஆழ்ந்த பயிற்சி உடையவராக ஒரு புலவரும் வரவில்லை; அதனால் அரசனுக்கு ஏமாற்றம் உண்டாயிற்று. ‘நம்முடைய விருப்பம் நிறைவேறாமற் போய்விடுமோ!’ என்று எண்ணி ஏங்கினான். தன் குலதெய்வமாகிய சொக்கநாதரிடம் தன் குறையை முறையிட்டுக்கொண்டான்.

ஒரு நாள் கோயிலில் இறைவன் எழுந்தருளியிருக்கும் பீடத்துக்கு அருகில், சில செப்பேடுகள் இருந்ததைக் குருக்கள் கண்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞர்_கதை.pdf/39&oldid=1527458" இலிருந்து மீள்விக்கப்பட்டது