பக்கம்:கவிஞர் கதை.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உரை வகுத்த நக்கீரர்

39



கள் எல்லோரும் சேர்ந்து உரையை எழுதவில்லை. ஆளுக்கு ஒர் உரையை எழுதினார்கள். எல்லோரும் உரைகளை எழுதிய பிறகு, பாண்டியனுக்குத் தெரிவித்தார்கள்.

அரசனுக்கு இப்போது ஒரு புதிய சங்கடம் உண்டாகி விட்டது. நாற்பத்தொன்பது உரைகளை வைத்துக்கொண்டு என்ன செய்வது? ஏதாவது ஒன்று இருந்தால் போதுமே! நாற்பத்தொன்பதும் பெரும் புலவர்கள் எழுதிய உரைகள். அவற்றில் எதைப் பொறுக்கி எடுப்பது? எப்படித் தேர்ந்தெடுப்பது? அரசனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை.

கோயிலுக்குப் போய்ச் சொக்கநாதரைத் தொழுதான். “சுவாமி, அகப்பொருள் இல்லை என்று கவலைப்பட்டேன். நீயே ஒரு நூலை அருள் செய்தாய். இப்போது அந்த நூலுக்கு நாற்பத்தொன்பது உரைகள் வந்திருக்கின்றன. ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். புலவர்களுக்கு மன வேறுபாடு இல்லாமல் சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுக்க ஒரு வழியும் தெரியவில்லை. மூல நூலை அருளிய நீயே இதற்கும் ஒரு வழியை அருள் செய்ய வேண்டும்” என்று வேண்டிக்கொண்டான்.

அவன் அன்பையும் குறையையும் உணர்ந்த இறைவன், அசரீரியாக, “இவ்வூர் வணிகர் தெருவில் உப்பூரி குடி கிழார் என்று ஒருவர் இருக்கிறார். அவருக்கு ஒரு குழந்தை பிறந்திருக்கிறான். அவனுக்கு ருத்திரசன்மன் என்று பெயர். அவன் முருகனுடைய அம்சமுடையவன். ஊமை, அவனை அழைத்து வந்து, உயர்ந்த ஆசனத்தில் அமரச் செய்து வழிபடு. பிறகு புலவர்களைத் தாம் எழுதிய உரைகளைப் படிக்கும்படி சொல். யாருடைய உரையைக் கேட்டு, மகிழ்ச்சி அடைந்து அவன் மெய்ம்மயிர் சிலிர்க்கிறானோ, அந்த உரையே சிறந்தது என்று அறிந்துகொள்ளலாம்” என்று அருளினான். பாண்டியன் மகிழ்ந்து, இறைவனை வணங்கி, விடை பெற்றுச் சென்றான். .

புலவர்களிடம் இந்தச் செய்தியைத் தெரிவித்தான். வணிகர் தெருவில் விசாரித்து, ருத்திரசன்மன் என்ற பையன் இருப்பதைத் தெரிந்துகொண்டான். ஒரு நல்ல நாளில் அவனை உபசாரத்துடன் அழைத்து வரச் செய்தான். புதிய ஆடையை அணிவித்து, வெண், மலர் மாலை புனைந்து, உயர்ந்த ஆசனத்தில் அமர்த்தினான். புலவர்கள் தம் உரைகளோடு அங்கே வந்து அமர்ந்துகொண்டார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞர்_கதை.pdf/41&oldid=1527461" இலிருந்து மீள்விக்கப்பட்டது