பக்கம்:கவிஞர் பேசுகிறார், பாரதிதாசன்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலை என்றால் என்ன?


தமிழுக்கு முன்னேற்றம் வேண்டுமா? என்பது சில புலவர்களின் சந்தேகம். ஏன்? சிவபெருமான் வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி அதற்கேற்ப தென் மொழியை அகத்தியருக்கு அருளினார் என்று, சிவபிரானே தமிழை உண்டாக்கினதாகப் பாடியிருக்கிறது. இந்தச் சிவபெருமான் அந்தக் காலத்தில் தமிழை உண்டாக்கியபோதே இந்த வடமொழி தென்மொழிக் கலகத்தையும் உண்டாக்கி விட்டார். தமிழை உண்டாக்கிய சிவபெருமான் மறுபடியும் சங்கமமர்ந்து பண்ணுறத் தெரிந்த பசுந்தமிழ் என்று, தமிழை மறுபடியும் கற்றுக் கொண்டாராம். உண்டாக்கிய சிவபெருமானே தமிழை மறந்துவிட்டு மறுபடியும் சங்கத்தில் உட்கார்ந்து தமிழ் படித்துக் கொண்டாராம். ஒரு வேளை தாம் உண்டாக்கிய தமிழைத் தாமே மறந்து விட்டாரோ என்னவோ! இல்லை. ஒரு வேளை, தமிழ் தாழ்ந்து போச்சு என்று நினைத்து மறுபடியும் தாமே படிக்க ஆரம்பித்தாரோ என்னவோ! எது எப்படியோ? சிவபெருமான் உண்டாக்கியது தமிழ். அதற்கு மனிதர்களாகிய நாம் முன்னேற்றம் எப்படிச் செய்ய முடியும்?


கவிஞர் பேசுகிறார்