பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6 பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு நூலின் மகுடமாக அமைந்திருப்பது கீதை காட்டும் பாதை. இராமன் எழுத்தில் காட்டாததை வாழ்ந்து காட்டினான். ஈண்டுக் கண்ணன் வாழ்ந்து காட்டியதுடன் எழுதியும் காட்டியுள்ளான். அந்த எழுத்துதான், இந்து சமய சாத்திரமாகிய 'பிரஸ்தான திரயம்'2 என்பதில் கீதையும் ஒன்றாக அமைந்திருப்பது. விகடனில் கட்டுரைகள் வரும்போதே கோயில் பிரசாதத்தை உண்டு மகிழ்வது போல் அவற்றைப் படித்து மகிழ்ந்தேன். நூலின் அவதாரம் என் கைக்குக் கிட்டியதும் எழுதத் தொடங்கினேன். கண்ணப்பன் கண்ணுதலப்பனுக்கு வழங்கிய அமுதைச் சுவைத்தது போல் மனத்தால் சுவைத்துச் சுவைத்து மகிழ்ந்து இந்நூலாக வடித்தேன். முன்னுரை (தோரணவாயில்) முடிவுரை நீங்கலாக நூல் ஒரு பதிகம்போல் பத்து இயல்களாக அமைந்துள்ளது. இந்த நூல் என் மனம் உரைத்த உரைகல்லாக அமைந்துள்ளது. வேறு பலர் படித்தால் வேறுவிதமாக அமைதலும் கூடும். படிப்போர் புதுக்கவிதையில் பரவசப்பட வேண்டும் என்பதையே என் நோக்கமாகக் கொண்டு நான் கூற வேண்டியவற்றை வாலியார் வாக்கிலேயே அமைத்துள்ளேன். அதனால் நூலும் நீண்டது; நீண்டாலும் வாசகர்க்கு வாலியாரின் கவிதையையும் படித்துச் சுவைக்க வாய்ப்பு தருகின்றது என்ற பெருமிதமும் மகிழ்ச்சியும் என்பால் எழுகின்றன. நூல் முடியும் வரை கண்ண பெருமானே எனக்கும் வழிகாட்டிக் கொண்டிருந்தான் என்பது என் அதிராத நம்பிக்கை. 2 திரயம்மூன்று-உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம் பகவத் கீதை என்பவை