பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரணத் தரகர்கள்:

உதிரம் ஓடும் நரம்பெல்லாம் - உன் உடலின் சிவப்பு நதியாகும் மதுவாய்க் காலாய் மாறுகையில் - அது மரணம் வருகிற வழியாகும்!

மரணத் தரகர்கள் மாத்திரைகள் - வெறும் மாயச் சுகம்தரும் நோய்விதைகள்! புரட்டும் அழுக்குப் பொய்மான்கள் - உன் புலன்களை அழிக்கும் கரையான்கள்!

அரும்பும் நாற்றங் காலுக்கு - தினம் அக்கினித் திராவகப் பாசனமா? சுருங்கிச் சுயஒளி மங்கிவர - ஒரு சூரியப் பிஞ்சு வெம்புவதா?

நொடித்து நலிந்த எலும்புதசை - அவை நோய்களின் நொறுக்குத் தீனிகளா? சுடர்விட வேண்டிய வாலிபத்தில் - நீ சுடுகாட்டுக்கா விருந்தாளி?

பகைக்கஞ் சாஉனை வீழ்த்தவரும் - பெரும் பகை-கஞ்சா, அதன் உறவெதற்கு? புகைக்குச் சாய்கிற கொடிமரமா? - நீ போதையில் சரிகிற கோபுரமா?