பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிலவு முகத்தின் அழகெல்லாம் - ஒரு நிலைக்கண் ணாடியில் தேய்கிறது! மலரும் நினைவுகள் எனக்கில்லை - என் மாலைக் கனவுகள் கணக்கில்லை!

தலையில் பாதி நரைச்சாச்சு - என் தலையணை கூடப் பஞ்சாச்சு! இலையில் சோறும் மண்ணாச்சு - என் இளமையை நானே தின்னாச்சு!

வாழ்க்கைத் துணைவன் வரக்காணேன் - நான் வாசல் தூணின் துணையானேன்! பாழ்கின றுக்கு இடிந்தகரை - என் பருவக் கனவுகள் முடிந்தகதை!

பூசுற மஞ்சள் தேயவில்லை -என் புடவையின் ஈரம் காயவில்லே! பூசையும் வெறுத்துப் போயாச்சு - என் புலன்கள் மரத்து நாளாச்சு!

கண்ணித் துளிகள் முகம்கழுவும் - என் கனத்த மூச்சுகள் எனைத்தழுவும்! தண்ணி மீனின் தாய்வீடு - அது தரைமீன் எனக்குச் சுடுகாடு!

தாலி கழுத்தைத் தீண்டவில்லே - நான் தகப்பன் வீட்டைத் தாண்டவில்லே! மூலைக் கிழங்கள் ரெண்டோடு - நான் மூணாங் கிழமா சேர்ந்தாச்சு!