பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞாயிறு தாராபாரதி என் இளவல்.

எதுகையாய்ப் பிறந்து, மோனையாய் என்னை முந்தியவர்.

தாராபாரதி இன்று தமிழ் கூறும் நல்லுலகிற்குத் தெரிமுகம் என்றால் -

அவர் இலக்கியவீதி இனியவனின் அறிமுகம். இளைய கவிஞர் பலருக்குத் துறைமுகம். தம்பி தாராபாரதியின் மறைவுக்கு முன்னும் பின்னும் அவரது எல்லா நூல்களையும் இலக்கிய வீதியே வெளியிட்டு, அறிமுகப்படுத்தி அவர் நினை வைச் சிறப்பிக்கிறது; புகழைச் சேமிக்கிறது.

காகிதங்களில் இறைந்து கிடக்கும் கவிஞாயிறின் சுருக்கெழுத்து வார்த்தைகளுக்கும், கிறுக்கெழுத்து வரிகளுக்கும் -

நூல் உருக் கொடுக்கும் முயற்சியை என் கடமையாக எண்ணுகிறேன்; இதை, தம்பியின் புகழ் வயதை நீட்டும் தவமாகப் பண்ணுகிறேன்.

தாராபாரதி - பிற்போக்குச் சக்திகளின் பிடரியைப் பிடித்து உலுக்கி, முற்போக்குக் கருத்துகளை முன் வைப்பவர்.

'கடையனுக்கும் கடைத்தேற்றம் வேண்டும் என்னும் இடையறாத தாகம், இவரது வரிகளின் நடை வேகம்.