பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகல் நேரத்திலேயே இந்திய வீதிகள் இருண்டு கிடக்கின்றன!

மனித நிழல்கள் இந்த மண்ணுக்குக்குடைபிடிக்கும் என்றல்லவா நினைத்தோம்? ஆனால், இங்கே மனிதர்கள் தங்கள் நிழல்களாலேயே பூமியை இருட்டாக்கிக் கொண்டிருக்கிறார்களே!

சமூகத்தின் சீரழிவிற்கு யார் பொறுப்பு? நான், நீங்கள், அரசியல்வாதிகள் - அனைவருமே கூட்டுப் பொறுப்பேற்க வேண்டிய குற்றவாளிகள்!

காலம் கடந்துவிடவில்லை. வாருங்கள், நம்மைப் புதுப்பித்துக்கொண்டு நடப்போம். தேசப் படத்தின் தூசுகளைத் துடைப்போம்.

மக்களாட்சியில் சமத்துவத்தைப் பாடிவிட்டு, கவிஞர்கள் சிலர் மன்னர்களாக முடி சூட்டிக் கொள்கிறார்கள். இலக்கியச் சந்தையில், மகுடங்கள் மலிவுவிலைக்குக் கிடைக்கின்றன. இந்த மலிவுப்பதிப்பு மன்னர்கள் வரிசையில், இன்னொரு நாற்காலி போட்டுக் கொள்ள எனக்குச் சம்மதமில்லை.

நான் மக்கள் கவிஞனாக - உங்கள் தோள்களில் தோழமையோடு கைபோட்டுக் கொண்டு உலா வரவே விரும்புகிறேன்...! வாருங்கள் நண்பர்களே, நாம் சேர்ந்து நடப்போம்; நமது வியர்வையால் பூமியைக் கழுவிப் புதுப்பிப்போம்!

இது எங்கள் கிழக்கு - 1989