பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரம்வைத்தார் உன்முன்னோர் மதில் வைத்தார் உன்பாட்டன்; உரம் வைத்தான் உன்தந்தை உருக்குலைக்கத் தானா,நீ?

கைநகத்தில் அழுக்கெடுக்கக் கடப்பாரை தேடுவதா? வெயிலுக்குத் தீக்குடையா? விடைகாண வன்முறையா?

பொதுச்சொத்தை அழிப்பதுவா புரட்சிக்கு அடையாளம்? பொதுமக்கள் புலம்பல்களா புரட்சிக்குச் சங்கீதம்?

சிந்திப்பாய் ஒருநொடி -- 岛 சீரழிக்கும் பலகோடி மந்திரிக்கா சொந்தம்? மனிதா உன் சொத்துக்கள்!

வெறித்தனத்தின் விளைவுகளை வெற்றியெனக் கொண்டுவிட்டால் சரித்திரத்தில் வன்முறைதான் சாதனைஎன் றாகிவிடும்!

வீதிகளை உன்னுடைய வேட்டைக்கா டாக்காதே! பாதைகளைப் பொதுமக்கள் பலிமேடை யாக்காதே!