பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகம் ஆறடிச் செவ்வகம்!

ஒவ்வொரு கல்லறை மேடையும் உன்னதம் நிரம்பிய புத்தகம், ஒவ்வொரு மனிதனின் சிறுகதை, உதிர்ந்த பூக்களின் கவிதைகள்!

நரைகள் எழுதிய நாவல்கள் நடுவில் முடிந்தவர் நாடகம்! இறுதிப் பயணக் கட்டுரை; இறப்பின் பெட்டிச் செய்திகள்!

படிக்கட் டாகிய மலைகளோ? படுக்கை விரித்த தூண்களோ? இடிந்த கோட்டை மதில்களோ? இயற்கையின் செய்தித் தாள்களோ?

பிறந்தவை முடியும் பாதைகள்; பிணங்கள் வசிக்கும் வீதிகள் இறந்த கால நகல்களே, இவைதாம் இறந்தவர் முகங்களே!