பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/342

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாற்காலி மேசையென்று நாடெங்கும் பஞ்சணைகள்; தீர்க்காத கோப்புகளோ தேசமெங்கும் தலையணைகள்!

வீட்டுக்குள் தூங்கியின்று வீண்பொழுது போக்காதே; கோட்டைக்குள் போனபின்பு குறட்டை ஒலி எழுப்பிடலாம்!

ஆசிதந்து நீதூங்க ஆராரோ இசையினிலே தேசிய கீதம்தந்து தினமுன்னைத் தாலாட்டும்!

நீதித் தராசுகளும் நித்திரைக்கு இடமளிக்கும்! நீதிக்கு ஒரு தட்டு; நீயுறங்க மறுதட்டு!

சத்தியத்தின் பெருந்துக்கம் சரித்திரம் ஆனதடா! சித்திரமே அதுஉன்னைச் சீக்கிரமே தொற்றுமடா!