பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச்சிறகால் வாத்தை அடிக்கலாம் வா!

என்னருமை இளந்தமிழா கொஞ்ச நேரம் என்னோடு தாய்மொழியில் பேச லாம்வா! தன்னுரிமைத் தாய்மொழிமேல் பற்று வைத்தல் தலைக்குனிவு என்றெதற்கு எண்ணு கின்றாய்?

அன்னையவள் தமிழாட்சி உனது நாட்டில் அயல்மொழியின் அரசாட்சி உனது நாக்கில்! கன்னிமையே மாறாத தமிழை உந்தன் கண்ணிமையில் காப்பதற்கேன் மறந்து போனாய்?

நாடெல்லாம் வள்ளுவனை நகல் எடுக்கும்; நகரெல்லாம் கம்பனது புகழ் விரிக்கும்;

எடெல்லாம் இளங்கோவின் நகல் பதிக்கும்; எழுத்தெல்லாம் பாரதியைப் படம் பிடிக்கும்;

காடெல்லாம் பாவேந்தன் களம் அமைக்கும்; கடலெல்லாம் கலம்மிதக்கும், ஆனால் தமிழன் வீடெல்லாம் மட்டும்தான் தமிழ் விளக்கின் வெளிச்சத்தை இருட்டடிப்பு செய்தி ருக்கும்!