பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தமிழ் மண்ணில்
நிலைத்திருக்கும்....
முனைவர் சிலம்பொலி சு.செல்லப்பன்

அருமை நண்பர் தாராபாரதி அவர்கள் - இன்றைய முன்னணிக் கவிஞர்களுள் ஒருவர்: தமக்கென ஒருதனித்த பாங்கினைக்கொண்டு எழுதி வருபவர்.

வள்ளுவரின் வாழ்வியல் நெறியும், இளங்கோவின் இன உணர்வும், பாரதியின் விடுதலை வேட்கையும், பாவேந்தரின் மொழிப் பற்றும் ஒன்றிணையப் பாடும் ஒப்பற்ற கவிஞர்.

கவிஞர் தாராபாரதி, மரபுக்கும் புதுமைக்கும் ஓர் இணைப்புச் செய்வது போல இந்நூலை யாத்துள்ளார்; புதுக் கவிதைப் பாங்கில் மரபுக் கவிதைகளைப் படைத்துத் தந்திருக்கிறார்

இந்நூலில், புதுக் கவிதையின் வேகத்தையும் காண முடிகிறது; மரபுக் கவிதையின் யாப்பமைதியையும் சுவைக்க முடிகிறது. யாப்புக் குறையாத மரபு வடிவில் புதுமை எண்ணங்களைச் சிறப்பாகப் பாய்ச்சியிருக்கிறார். இதுவே இவருடைய வெற்றிக்குக் காரணமாகிறது.

கவிஞரின் கவிதைத் தலைப்புகளே கலையழகுடன் மிளிருகின்றன! நாட்டைச் சூழ்ந்திருக்கும் தீமை இருள் அகன்று நன்மையொளி பரவ வேண்டுமெனும் கவிஞரின் ஆர்வம், இந்நூலுக்குப் புதிய விடியல்கள் என்னும் தலைப்பைத் தந்திருக்கிறது. உட்தலைப்பு ஒவ்வொன்றிலும் தனியழகு பொலிகிறது

கவிஞரின் கவிதைகளில், இலக்கியத்திற்குக் கூறப்படும் அத்துணை நயங்களும் சிறந்து காணப்படுகின்றன.