பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதை நலன்

101


-பட்டது என்றாலும், அது அவன் மேலும் ஆதிக்கம் செலுத்தும் ஒன்று என்பது புலனாகும். ஒரு நல்ல கவியை அதனை இயற்றிய நல்லாசிரியனே திருப்பிப் படிப்பானாயின், அதில் தான் எழுதும் காலத்தில் கொண்ட கருத்தினும் மற்றொரு புதுக் கருத்தும் அமைந்திருப்பதைக் காண்பான். தான் ஒரு பொருளைக் கருத்திற்கொண்டு இயற்றிய அந்தக் கவிதை. இப்படி பல்வேறு வகையில் பரந்து பொருள் பெற்று விளங்குகின்றதென்பதை நோக்க, அவனே வியப்படையவும் கூடும். அவன் இயற்றிய அந்தக் கவிதையே அவனைப் பலப்பல இடங்களுக்குப் பற்றி ஈர்த்துச் செல்லும் திறன் சிறந்த ஒன்றல்லவா? அது மட்டுமன்று; மேலை நாட்டுப் புலவர் கூறியவாறு அது கவிஞனை அளவிட்டு உலகுக்குக் காட்டுகின்ற ஒரு நீதிபதியாகவும் இருக்கிறது. ஒரு புலவனது கவிதையைக் கொண்டு, அவன் காலத்தில் வாழ்கின்றவர்கள் மட்டுமன்றி, அக்கவிதை உலகில் வாழும் வரையில், அக்கவிஞனைப் பற்றிய செயல்களையெல்லாம் அளவிட்டுரைக்க முடியும். அந்த நிலையில் அவன் உடலால் இறந்தவன்தான் என்றாலும், உலகில் சிரஞ்சீவியாக வாழ்கின்றவனே. திருவள்ளுவரின் திருக்குறளைப் பயிலும் காலத்தும், எடுத்துப் பாராட்டும் காலத்தும், 'என்று திருவள்ளுவர் கூறுகின்றார். என நிகழ்காலத்திலேதான் கூறுகின்றோம். இந்த முறை எந்நாட்டுக் கவிஞருக்கும் பொருந்தும் ஒரு பொது நீதியே. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்வாழ்ந்து மறைந்தவரை அவர் நூல் பற்றிக் குறிப்பிடும்போது 'கூறுகிறார்' என்று நிகழ்காலத்தால் அவரே நேரில் கூறுவதுபோலக் கூறவைத்தது கவிதானே? ஆம்; கவியே கவிஞனை அமரனாக்கியது; ஆகவே, அது அவன் தலைவன் தானே?

மற்றும் ஒருவன் கவிதையைக் கொண்டே அவனையும் அளவிட முடியும். மேலை நாட்டில் எத்தனையோ ஆய்வு நூல்கள் ஒவ்வொரு கவிஞனைப் பற்றியும் வெளி வந்துகொண்டிருக்கின்றன. அவனுக்குப் பின்னால் வரும் அத்தனை ஆய்வாளர்களும், அவனைக் கவிதை மூலமே ஆராய்ந்து, அவனைப்-