பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

கவிதையும் வாழ்க்கையும்


கவிதையிலே திறன் ஆய்ந்து செம்மை காண விரும்புவோர் எப்படி இரண்டோர் இடத்தை மட்டும் கண்டுகொண்டு முடிவு செய்ய முடியும்? அவர்களும் கவிதை முழுவதிலும்தோய்ந்து, தாமே அக்கவிதையாக மாறி, அனைத்திலும் ஆழ்ந்து ஆய்வை மேற்கொண்டால்தான், கவிதைநலம் சிறந்து விளங்கக் காண முடியும். இவையெல்லாம் நல்ல உள்ளம் வாய்ந்த மெய்க் கவிஞர்தம் கவிதைகளுக்குப் பொருத்தமான ஆய்வைப் பற்றியன. கவிதையே அல்லாதவற்றைக் கவிதை என எடுத்து வைத்து ஆய்பவரைப்பற்றி நாம் ஒன்றும் கூறவேண்டா. அவர்தம் ஆய்வுகளையும், அவ்வாய்வுக்குக் காரணமான அந்தக் கவிதைகளையும், அவற்றைச் சார்ந்த பிறவற்றையும் காலத் தேவன் தன்போக்கில் தரை மட்டமாக்கிக் கொண்டே போவான் என்பது உறுதி. பலவற்றை அந்த நிலையிலும் பார்த்திருக்கின்றோமே! பின் வாய்ப்பு வரும்போது அக் கவிகளைப் பற்றியும் அவற்றின் நலங்கேடுகள் பற்றியும் விளக்கமாக எடுத்து ஆராய்வோம்.

இவ்வாறு கவிதையின் நலனை ஆராய்பவர் தமிழ்நாட்டில் இருப்பதை மறந்து, அக் கவிதையின் நலன் பற்றியும், அந் நலனைச் சிறக்கச் செய்யும் பிற பற்றியும் காண்போம். கவிதை, சொல்லும் பொருளும் கலந்த ஒன்று என்பதும், சொல்லும் பொருளும் உடலும் உயிரும் போன்றவை என்பதும் கண்டவை. இரண்டும் கவிதைக்கு இன்றியமையாதனவே. கவிஞன் கைப்பட்ட எப்பொருளும் ஏற்றமுற்று விளங்கும் என்பதையும் மேலே கண்டோம். கவிதை, வாழ்வில் பெறமுடியாத மேம்பட்ட ஒன்று என்று கொள்வதற்குக் கவிஞன் நல்லுள்ளமும், எடுத்த பொருளும், சொல்லும் இன்றியமையாதன என்ருலும், அவற்றுடன் இன்னும் சிலவும் சேர்ந்தே அக்கவிதையைச் சிறக்கச் செய்கின்றன என்பதையும் காணல் வேண்டும். கவிதை, ஒரு நல்ல சொல்ஓவியம் எனக் கண்டோம். சொல்லும் பொருளும் கலந்து சிறத்தல் நற் கவிதைப் பண்பு. அச்சொற்கள் அமைப்பைப்பற்றி ஒன்று கூறல் வேண்டும்.௳