பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

கவிதையும் வாழ்க்கையும்


உள்ளத்தையும் அளந்து அவர்தம் மெய்ப்பாட்டின் வழி வாழ்வையும் உலகுக்கு உணர்த்துவதிலேதான் கவிதை, நலன் நிறைந்ததாகின்றது. தமிழில் இத்துறையில், கவிஞனுக்கு எழுத்துக்களும் சொற்களும் பயன்படுகின்றன. தமிழில் எழுத்துக்களை இனவாரியாகப் பிரித்துள்ளார்கள். வல்லினமும், மெல்லினமும், இடையினமும் மெய்யெழுத்துக்களாகின்றன. இவ்வாறு மூவகைப்பட்ட இனங்கள் எழுத்தில் எதற்கு? மக்களுக்குள் இனப்போராட்டம் மிகுந்து நாடுகளைப் பொசுக்கும் , பொல்லாத இந்தக் காலத்தில் எழுத்துக்களுக்குள்ளும் இனமா?" என்ற கேள்விகள் எழுதல் இயல்பே. ஆனால், இந்த எழுத்துக்கள் தம்முள்வர்க்கப் போராட்டத்துக்கு வரிந்து கட்டி நிற்கவில்லை. இவை அனைத்தும் மனிதனுக்குப் பயன்படும் கவிதை அமைப்புக்காகவே அமைந்துள்ளன. மற்றவர்களுக்காகவே இவ்வெழுத்தும், மொழியும், கலையும் வாழ்கின்றனவேயன்றி, மனிதனைப் போன்று மற்றவரை அடக்கித் தாம் மட்டும் வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் இவை வாழவில்லை. இவ்வெழுத்துக்கள் அவ்வாறு அமைந்துள்ளமை மெய்ப்பாட்டை விளக்கும் கவிக்குக் கவிஞன் வேலையை எளிமையாக்குகின்றன. எவ்வாறு?

மனிதன் உள்ளத்து வெகுளி உருவாகின்றது. உள்ளத் துண்டாகும் உணர்ச்சி மெய்வழி வெளிப்பட்டுத்தான் ஆக வேண்டும். அவ்வாறு வெளிப்படும்போது அது சொற்களாகவும் வெடிக்கும். கோபத்தால் முகம் சிவந்து, சொற்களும் இடி என முழங்கி வெளிவருதல் இயற்கை. இந்த நிலக்கு வல்லின எழுத்துக்கள் மிகுதியும் பயன்படுகின்றன என்பர் ஆராய்ச்சியாளர்; அதற்கெனக் கம்பராமாயணத்திலும் சிலப்பதிகாரத்திலும் சிற்சில சான்றுகளையும் காட்டுவர். நாமும் அவற்றுள் இரண்டொன்று கண்டு மேலே செல்வோம்.

சிலப்பதிகாரத்தில், - கண்ணகியின் வாக்கிலே இவ்வல்லெழுத்துக்களை அமைத்து அவள் சீற்றம் வெடிப்பதைக் காட்டுகின்றார் இளங்கோவடிகள். வாழ வந்த மதுரை மாநகரிலே தன் கனவன் கோவலன் கொல்லப்பட்ட செய்தி கண்ணகியின் காதுக்கு எட்டிய உடனே அவள் உள்ளம்