பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதை நலன்

121


கவி-நலன் நிறைந்த கவிதை-காணும் பொருளையும் அல்லாப் பொருளையும் விளக்கமாக்கி, அந்தப் பொருளையுங்கூடத் தன்னுள் அடக்கி, தன்னைப் பயில்வார் அப்பொருளை நன்கு புரிந்துகொள்ளும் வகையில் தெளிவாக விளங்க வைக்க வேண்டும். அவ்வாறு கற்றாரும் கல்லாரும் அறியாப் பொருளையும் எளிதில் அறிந்துகொள்ளும் வகையில், தான்காட்ட விரும்பும் பொருளை விளக்குவதே நலம் நிறைந்த கவிதையாகும். பவணந்தியாரின் வாக்கை அப்படியே தந்து மேலே செல்லலாம்.

சில்வகை எழுத்திற் பல்வகைப் பொருளைச்
செவ்வன் ஆடியில் செறித்து இனிது விளக்கித்

திட்பம் நுட்பம் சிறந்தன சூத்திரம்
(18)

என்பது நன்னூல்.

கவிதைக்குக் கண்ணாடி உவமையாய் அமைந்த நலம் கண்டோம் இனி அந்த உவமையே கவிதையின் நலத்துக்குச் சிறந்த காரணமாய் அமைகின்றது என்பதையும் காணல் வேண்டும். உவமை என்பது என்ன? அது எப்படிக் கவிதைக்கு அங்கமாகின்றது? அதனால் கவிதை சிறப்பது எங்ஙனம்? செய்யுளுக்கே உவமை சிறந்த அணியாய் அமைகின்றது. நாம் மேலே அணி இலக்கணம் பற்றி ஓரளவு கண்டோம். தொல்காப்பியர் காலத்தில் உவமை அணி ஒன்றாகவே இருந்த அது, காலப்போக்கில் நூற்றுக்கும் அதிகமாகமாறி நின்றதைக் கண்டோம். தொல்காப்பியம், பொருளுக்கு இன்றியமையாத செய்யுளைக்கூறி அதன் இன்றி அமையாத உவமையை மட்டுந்தான் காட்டுகிறது. உவமை என்பது என்ன? அது, இரண்டு பொருள்களை ஒப்புமைப்படுத்தி, ‘இது போல்வது?’ ஒன்று! என்று ஒரு பொருளால் மற்றொன்றை விளங்க வைத்தல். விளங்காத பொருள்களை உவமை நன்கு விளக்கிக் காட்டும். காணாத பொருள்களை அறிவிக்க, கண்ட ஒன்றைக் காட்டி ‘இது போன்றது அது’, என்பதற்கு இந்த உவமை பயன்படும். ஆனால், காணாத ஒன்றைக் காட்டுவதற்கு மட்டுந்தான் உவமை

க. வா.-8