பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

கவிதையும் வாழ்க்கையும்


என்கிறார்; தொடர்ந்து, ‘எனவே, உவமிக்கப்படும் பொருள் இழிந்து வரல் வேண்டுமென்பது’ என்கிறார். உரையாசிரியர் கூற்றும் உண்மையாயினும், உவமிக்கப்படும் பொருள் இழிந்து வரவேண்டும் என்பது தொல்காப்பியர் கருத்தாகாது என எண்ணுகின்றேன். பொருள் இழிந்து வருவதாயின், அதை ஏன் கவிஞன் பாடவேண்டும்? அவர் உதாரணமாகப் பொன்மேனி என்ற ஒரு தொடரைக் குறிக்கின்றார். இதில் உவமிக்கப்படுவது மேனி; உவமப் பொருள் பொன். பொன் உயர்ந்தது தான். ஆனால், மேனி தாழ்ந்த ஒன்றா? புலவர் தாம் எடுத்துக் கொண்ட பொருளின் ஏற்றத்தையும் தோற்றத்தையும் பாட் நினைக்கின்றவர். அவர் விருப்பத்துக்குத் துணையாக உதவுவதே உவமை. அந்த உவமையில் தன் பொருளைத் தாழ்த்திக் கொள்ள எந்தக் கவிஞன் தான் எண்ணுவான்? தன் கைச்சரக்கு எவ்வளவு மட்டமானதாயினும், அதைக் குறைத்துக் கூறும் கடைக்காரனை நாம் எங்கும் காணமுடியாதே! அப்படி யிருப்பானாயின், ஒன்று அவன் பயித்தியக்காரனாய் இருக்க வேண்டும்; அன்றேல், அவன் வாணிபம் விரைவில் மூடப்பட வேண்டியதாயிருக்கும். எனவே, எவனும் தான் காட்ட விரும்பிய பொருளைத் தாழ்த்திக் காட்ட எண்ணமாட்டான். பேராசிரியரும் இந்த வகையில் கருத்திருத்தி அவ்வாறு எழுதியிருக்க மாட்டார் என நினைக்கின்றேன். பொன்மேனி என்ற அந்த உதாரணத்தையே எடுத்துக்கொள்வோம். மாம்பழம் விற்கின்ற ஒருவனை நிறுத்திக் கூடையில் உள்ள மாம்பழத்தைப் பற்றி விசாரிப்போம். அவன் என்ன சொல்லுவான்? 'ஆகா! இது தங்கமான மாம்பழம்! இதன் நிறத்தையே பாருங்கள்! அப்படியே கண்ணில் ஒற்றிக்கொள்ளக் கூடிய வகையில் பொன்னிறமாய் நன்கு கனிந்து இருக்கிறது! தேவையா?" என்று தான் கேட்பான். இதனால் அவன் பொருளாகிய மாம்பழமோ, அதன் நல்ல நிறமோ, பொன்னில் குறைந்ததாகாது. மேலும், பொன் உயர்ந்ததுதான்; எனினும் மாம்பழத்தைத் தின்ன விரும்பிய ஒருவனுக்குப் பொன் எவ்வளவு தான் கிடைத்தாலும் அதனால் என்ன பயன்? அவனுக்கு வேண்டுவதெல்லாம் அழகிய நல்ல மாம்பழந்தான்; ஆகவே, ‘பொன் போன்ற பழம்’