பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

கவிதையும் வாழ்க்கையும்


ஊதியத்தைப் பெறும்போதும் ஒரு வேளை அவன் மகிழலாம். எனினும், அந்தக் கொடிய கூண்டுக்குள் தன் கைத்திறனைக் காட்டும் அந்த வேளையில்—அனைவரும் தன் திறமையைக் கண்டு கைகொட்டி, ஆரவாரித்துப் போற்றும் அந்தவேளையில், அவன் உள்ளத்தில் ஏது மகிழ்ச்சி? ஆனால். கலைஞன் நிலை—கவிஞன் நிலை—இதுவன்று. அவன் கலை, தானும் மகிழ்ந்து மற்ருேரையும் மகிழ வைப்பதே!

ஒன்றன்பின் ஒன்றாக இவ்வாறே எல்லாக் கலைஞர்களையும் கவிஞனேடு ஒப்பிட்டுக் காணமுடியும். அந்தக் காட்சிகளின் முடிவெல்லாம் பெரும்பாலும் ஒன்றாகவேதான் அமையும். மற்றவர் மகிழும் அதே வேளையில், மகிழ்ச்சியூட்டும் அக் கலைஞன் அந்த மகிழ்ச்சியில் திளைக்க முடிவதில்லை. அது மட்டு மன்று; மற்றவர் மகிழ, அதன்மூலம் தன் வாழ்வைப் பெருக்கவே அக் கலைகளை அவன் பயன்படுத்திக் கொள்ளுகின்ருன். ஓவியக் கலைஞனும் சிற்றுளிக் கலைஞனும் மற்றக் கலைஞர்களும் பெரும்பாலும் அந்த வகையில்தானே வாழ்வை நடத்துகின்றார்கள்? எங்கோ ஒருவர் இருவர், வேறு வருவாயால் வாழத் தெரிந்தவர்கள், இக்கலைகளைப் பொழுதுபோக்காகக் கொள்வார்கள். சிற்றுளி கொண்டு, சிதறும் துகள் தரும் தொல்லைக்குச் சலியாது, பெரிய கல்லைப் பெருமைசான்ற பதுமையாக்கும் அக் கைவண்ண்த் திறன் வாய்ந்த தொழிலாளியின் துயரை எண்ணிப் பார்க்க முடியுமா? ஒவியக் கலைஞன் மட்டும் என்ன, உள்ள நிறைவிலா வாழ்கின்றான்? ஆனால், கவிஞர் என்றுமே தம் கவிதை புனயும் தொழிலை வாழ்வுக்காக விற்பதில்லை; அப்படி விற்றதாகக் காணப்படும் கவிதைகளோ, என்றென்றும் வாழ்வதுமில்லை. அதுமட்டுமன்று: கவிஞன் தான் வருந்தி வருந்தி நூல் எழுதினாலும் அது கவிதையாகாது, ஏதோ சொல் கொண்டமைத்த ஒரு கவிதைச் சுவராக நிற்குமே ஒழிய, மற்றவர் மனத்தை மகிழவைக்கும் மலர்ச்சோலையாக அது நிச்சயம் இராது. கவிஞனுடைய உள்ள மகிழ்ச்சியில் உதிப்பதே கவிதை. உள்ளத்தை வருத்தி உதட்டில் சொல்லாக வரும் கவிதைகள் வெற்றுக் கவிதைகளாகி விணாகக்