பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதை நலன்

143


உள்ளுறை என்பதன் விளக்கத்தை மேலே கண்டோம், அதனைச் சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் அகராதி. ஆங்கிலத்தில் நன்கு எடுத்துக் காட்டியுள்ளது.

'உள்ளுறுத்து இதனொடு ஒத்துப்பொருள் முடிகஎன
உள்ளுறுத்து உரைப்பதே உள்ளுறை உவமம்' (அகத்.-51)

இவ்வுள்ளுறை உவமத்திற்கு உரையாசிரியர் நச்சினார்க்கினியர் கலித்தொகைப் பாடல் ஒன்றை உதாரணமாக எடுத்துத் தருகின்றார். 'வீங்குநீர் அவிழ் நீலம்' என்ற அறுபத்தாறும் கலி, எவ்வாறு உள்ளுறையாய் அமைகின்றது என்பதையும் அவர் எடுத்துக் காட்டுகின்றார். இதற்குமுன் உள்ளுறையோடு ஏனை உவமம் கலந்து வந்து, கருப்பொருள் நலமுற்றிய அந்த ஏனைய சாதாரண உவமையும் உள்ளுறை உவமத்துக்கு எவ்வாறு சிறப்புச் செய்கின்றதென்பதை 'விரிகதிர் மண்டிலம்’ என்ற கலிப்பாட்டால் நன்கு விளக்குகின்றார். 'இனிதமர் காதலன் இறைஞ்சித்தன் அடிசேர்பு, நனிவிரைந் தளித்தலின் நகுபவள் முகம் போல’ என்ற வெளிப்படை உவமமும் வந்து, அதற்குமுன் அமைந்த உள்ளுறை உவமத்திற்கு அணி செய்கின்றது. அதன் நலத்தை உரையாசிரியர் நச்சினார்க்கினியர், "துனி மிகுதலாலே பெருக்கு மாறுது வீழ்கின்ற கண்ணிர், காமத்தீயில் சுவறி அறுதலே யுடைத்தாய் ஒழுக, அவ் வருத்தத்தைக் கண்டு விரைந்து கணவன் அருளுதலின், சிறிது மகிழ்பவள் முகம் போல' என்ற ஏனை உவமம், 'தாமரை மலர் பணி வாரத் தளைவிடும்' என்ற உள்ளுறை உவமத்தைத் தரும் கருப் பொருட்குச் சிறப்புக் கொடுத்து நின்றது," என எடுத்துக் காட்டுகின்றார். இவற்றிலெல்லாம் ஆசிரியர் காட்ட விரும்பிய பொருள்கள் யாவை? நாம் மேலே வள்ளுவர் காட்டிய உவமையில் கண்ட நிலைதான் இங்கும். இந்த


1. Indirect suggestion by which an author who does not propose to explicitly state his idea, endeavours, however, to present it through the skilful employment of such telling comparisons as wouid help people to infer therefrom what he actually intended to convey'—Lexicon, Vol. I, p. 474,