பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148

கவிதையும் வாழ்க்கையும்


போலக் கங்கு கரை இன்றித் தொடர்ந்து வரும் ஒன்று. ‘கடல் போன்ற பிறவி’ என்பது உவமை. ‘பிறவியாகிய கடல்’ என்பது உருவகம். இது சற்றுச் சிறந்ததுபோலக் காணப்படுகின்றது. ஆய்ந்து பார்ப்பின், பொருள் ஒன்றே. பிறவியாகிய கடல் என்று கவிதையின் நலன் தோன்றப் பாட இந்த உருவக அணி உதவுகின்றது என்ற இந்த அளவோடு இதை நிறுத்தி, வாய்ப் புளதேல், பின்னர்ப் பார்த்துக் கொள்ளலாம். பிற அணிகள் அனைத்தும் இவற்றை ஒட்டியே தோன்றியும், பிறழ்ந்தும், உறழ்ந்தும், திரிந்தும் வருகின்றமையின், கவிதையின் நலத்திற்கு இவை அணி செய்வன போன்று, மற்றவை அத்துணை சிறந்தவை அல்ல என்று ஒதுக்குதல் ஈண்டைக்கு ஏற்புடைத்தாகும்.

இவ்வாறு கவிதை நலன் பல வகையில் சிறக்கின்றது. தமிழ்க் கவிதை மட்டுமன்றி, இங்குக் கூறிய அனைத்தும் எம்மொழிக் கவிதைக்கும் ஏற்றனவெனவே கொள்ளல் வேண்டும். இதுவரை கூறியவற்றான், கவிதை நலன் இன்னின்ன வகையால் சிறக்கின்றதென்பதும், சொல்லழகும் பொருளழகும் கவிதைக்கு உயிரும் உடலும் போன்று ஒன்றி நிற்பன என்பதும், அவற்றுள் ஒன்றின் நல்லமைப்புக் கெடினும் கவிதை நலன் கெடும் என்பதும், சங்க காலத்துக் கவிஞர் கவிதை நலன் கெடாத வகையில் பாதுகாத்தனர் என்பதும், பிற்காலப் புலவர்கள் கவிதை நலனைக் காக்க முற்படாது ஏதோ பாடி வைத்தார்கள் என்பதும், கவிதை நலத்துக்குச் சொல்லும் பொருளும் போன்று; உவமையும் சிறந்த ஒன்று என்பதும், அவ்வுவமை வெளிப்படை, உள்ளுறை, இறைச்சி எனப் பலவாகும் என்பதும், அவற்றுள் ஒவ்வொன்றும் இன்னின்ன வகையில் கவிதைக்கு நலன் தருகின்றது என்பதும், அவற்றின் அடி ஒற்றியே உருவகமும் கவிதை நலனுக்கு ஓரளவு உதவுகின்றதென்பதும் அறிந்தோம். கவிதையின் அமைப்பு, பண்பு, கலை நலன், அக் கவிதை செய்தவனாகிய கவிஞனின் பண்பு, நிலை முதலியவற்றைப் பற்றிக் காண்பதை இந்த அளவோடு நிறுத்தி, இனி வாழ்க்கையைப் பற்றி ஓரளவு ஆராய்ந்து, பின்பு அவை இரண்டும் ஒன்றை யொன்று எவ்வாறு பின்னிப் பிணைந்து வளர்ந்துள்ளன என்பதனையும் காண்போம்.