பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158

கவிதையும் வாழ்க்கையும்


மிடுகின்றன என்றும் கூறுவர். இன்று தோற்றத்தில் காணும் விண்மீன்களுக்குள்ளே மிகப் பெரியதும் நெடுந்தொலைவில் உள்ளதுமான ஒன்று ‘திருவாதிரை’ என்பது என்று ஆய்வாளர் கூறியிருக்கின்றனர். சிலர் துருவ நட்சத்திரத்திலிருந்து உலகம் ஐம்பது ஒளியாண்டுகள் தூரத்தே உள்ளது எனக் கண்டிருக்கின்றனர். ஒரு சூரியனுக்கும் மற்றொரு சூரியனுக்கும் உள்ள இடைவெளி எத்தனையோ கோடிக்கணக்கான கல் தூரம் என்பர். இப்படியே மண்ணையும் விண்ணையும் பற்றிய ஆராய்ச்சிகள் விரிந்து கொண்டே செல்கின்றன.

இவ்வாறு 'எண்ணற்ற உருண்டைகள் எப்படி விண்ணிடை வாழ்கின்றன?' என்று கேட்கலாம். சில காலத்துக்குமுன் மேனாட்டார் உட்பட அனைவரும் உலகம் தட்டை என்றுதான் எண்ணி வந்தனர். உலகத்தைப் பாய்போலச் சுருட்டலாம் என்பர் புராணக்காரர். விஞ்ஞான அறிவு வளர்ந்து இத்தகைய உண்மைகளையெல்லாம் ஆராயுமுன் உலகம் தட்டையானதென்றும், சூரியன் உலகைச் சுற்றி வருகின்றான் என்றும் கூறி வந்தனர். ஆனால், இன்று அவையெல்லாம் பொய்யாகி விட்டன. இந்த உலகமும். சூரியனும், பிறவும் உருண்டை வடிவாகவே உள்ளன என்பதைக் கண்கூடாகக் காண முடிகின்றது. உலகைச் சுற்றி வருவது எளிதாகி விட்டது. இந்த உலகம் உருண்டையாயின், அந்தரத்தில் தொங்குவதெப்படி? அதைத்தான் ஒரு மேலைநாட்டு விஞ்ஞானி கண்டு பிடித்தான். வானவெளியில் வட்டமிடும் கோளங்கள் தம் பற்றுக்கோட்டின் சத்தி வழியே நெடுந்தொலைவில் இடம் விட்டுத் தாம் வாழினும், ஒன்றையொன்று பற்றிக்கொண்டே வாழ்கின்றன என்பதைக் கண்டுபிடித்தான். அதன் வழித் தொங்குவன எத்தனையோ உருண்டைகள்; கண்டன சில; காணாதன மிகப் பல.

இன்றைய உலகம் விஞ்ஞானத்தில் வேகமாக வளர்ந்து கொண்டே செல்கின்றது. ஆயினும், இவ்வளர்ச்சியால் அண்டகோளத்தை அளக்க முடியவில்லை. அளக்க முடியாது போலும்! இதைப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நம் நாட்டில்