பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172

கவிதையும் வாழ்க்கையும்


முடியாது. எத்தனையோ கோடி ஆண்டுகளாக, அமைதியாக. ஆனால் புரட்சிகரமாக வளர்ச்சியடைந்து வந்துகொண்டிருக்கும் இவ்வுயிரின் வளர்ச்சி. இந்த மனிதநிலையில் அமைந்து முடிவு பெற்றுவிடும் என்று யாரும் சொல்ல முடியாது. உலக அரங்கில் நடைபெறும் பல்வேறு மாறுதல்களும், இந்த விதிக்கு உட்பட்டனவே. அரசியலாயினும், பொருளியலாயினும், பிற எந்த வகையாயினும், வளர்ச்சி இருந்துகொண்டே யிருக்குமேயன்றி 'இதுதான் முடிந்த முடிவு' என்று திட்டமாக முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் எதுவும் நிற்பதில்லை. உயிர் வளர்ச்சியும் இத்தகையதே. தோன்றிப் பலகோடி ஆண்டுகளாக, அது சிறிது சிறிதாக வளர்ச்சியடைந்துகொண்டே தான் வந்திருக்கின்றது. அதன் இன்றைய தோற்றம் மனிதன். இங்கேயே அது நிலைத்து நின்றுவிடும் என்று யாரால் அறுதியிட முடியும்? அதன் மாற்றம் வேகமாக நடைபெறவில்லையாதலால், அப்படியே நிற்பதுபோன்று நம் கண்ணுக்குத் தெரிகிறது. எனினும், நிமிடத்துக்கு நிமிடம் மாற்றம் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கும். நம் தோட்டத்திலுள்ள வாழையின் வளர்ச்சி ஒரு நாளில் நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. ஆனால், ஓர் ஆண்டில் அது குலை ஈன்று சாயத் தயாராக நிற்பதைக் காண்கின்றோம். மனித வாழ்நாள்கள் ஒரு நொடி போன்ற இந்த அகண்ட முகட்டுக்கும் உயிர் வளர்ச்சிக்கும் இடையில் கோடி கோடி ஆண்டுகள் கழிந்துவிட்டன. ஆகவே, மாற்றம் அத்துணை எளிமையாக நம் கண்முன் தெரிவதில்லை. எனினும் மாற்றம் நடந்து கொண்டேதான் இருக்கிறது.

உயிர் நூல் ஆராய்ச்சியாளர்கள் இவ்வுயிரையும் உடலையும் பற்றி முதலில் தவறான கருத்தினைக் கொண்டிருந்தார்கள் என்பதை ஹால்டேன்[1] என்னும் ஆய்வாளர் கூறியுள்ளர். உடலில் உயிர் தங்குவது இயற்கையே. ஆனால், ஓர் உயிர் இருந்து மறைந்தபின், வீழ்ந்த அவ்வுடலில் மற்றோர் உயிர் சென்று


  1. Man and Nature-The origin of life, by J. B. S.. HALDANE.