பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

174

கவிதையும் வாழ்க்கையும்


ஆழ்ந்து நோக்குவார்க்கு, அவர் உயிரின் தோற்ற வளர்ச்சியைத்தான் தம் உயிர்மேல் சார்த்திக் கூறினாரேயன்றி, தனிப்பட்ட தம் உயிரை மட்டும் கூறினார் அல்லர் என்பது புலனாகும். அருள் உணர்வு பெற்ற நல்லவர்கள் உலகத்தையே தம்முடன் அழைத்துச் செல்லும் நல்ல பண்பாளர்கள் என்பதை உலகம் நன்கு அறியுமே!

இந்தத் தோற்ற வளர்ச்சி அமைப்பில் மணிமொழியார் வளர்ச்சியை வகைப்படுத்திக் கூறினார்; அறிந்தபடியே. ஒருவாறு உயிர் வளர்ச்சியைப்பற்றித் தொகுத்துக் கூறினர் என்று கொள்ளுவதுதான் பொருத்தமானதாகும். எனினும் அதுவும் இன்றைய ஆய்வுக்குப் பொருந்துகின்றது. தமிழ் மக்கள் நெடுங்காலத்துக்கு முன்பே உயிர் அனைத்தும் ஒரு தன்மையன எனக் கண்டார்கள். எவ்வுயிராயினும் ஒன்றே என்பதுதான் அவர்தம் கொள்கை. இந்த உண்மையைத் திருவள்ளுவனார்,

‘பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும், சிறப்புஒவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.’

என்ற குறள்வழி விளக்கிச் சென்றார். மக்கட் பிறவியிலேயே பல்வேறு வேறுபாடுகளைக் கற்பித்துக்கொண்டு, ‘நான் உயர்ந்தவன்; அவன் தாழ்ந்தவன்’ என்ற மனப்பான்மையிலேயே வாழும் மக்களுக்கு, வள்ளுவர் அறிவுறுத்திய ஓர் உண்மை இது என்று கூறுவார்கள் சீர்திருத்த வாதிகள். அது ஒரளவு உண்மைதான் என்றாலும், அதற்கு மேலாக வள்ளுவர் உயிர்களின் ஏற்றத்தாழ்வற்ற உண்மையை இதில் கூறுகின்றார் என்பது பொருத்தமாகும். இன்றைய மேலைநாட்டு அறிஞர்கள். உயிர் அமைப்பைப் பல கோணங்களில் ஆராய்கின்றார்கள். எனினும், மரத்துக்கும் உயிர் உண்டு என்பதை நம் இந்திய நாட்டு விஞ்ஞானியாரே விளக்கிக் காட்டினர். இந்த உண்மையை எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் தமிழ்மக்கள் நன்கு அறிந்திருந்தார்கள். அறிந்திருந்ததோடு மட்டுமன்றி, உயிர் அமைப்பில் அவற்றுள் வேறுபாடு இல்லை என்றும், அவை சேரும் உடலை ஒட்டியே அவற்றின் தன்மைகள் மாறுபடுகின்றன என்றும், அவர்கள் அறிந்து எழுதிவைத்தார்