பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உயிர்த்தோற்ற வளர்ச்சி

177



யாளனோ, 'அதனால் ஒன்றும் நஷ்டம் இல்லை.' என்பான் இரண்டில் எது சரி? 'மெழுகுவர்த்தி கண்ணுக்குப் புலனாகவில்லை; ஆகவே, அது நஷ்டம்,' என்கிறான் வாங்கினவன், உண்மையில், அதன் விலை அவனுக்கு நஷ்டந்தான். ஆனால், அந்த மெழுகுவர்த்தி எவற்றால் ஆக்கப்பட்டதோ, அப் பொருள்கள் கெடுவதில்லையே! அவை அந்த வர்த்தியாய் இல்லை; வேறுவகையில் மாறி உள்ளன. அவை அழியவில்லை. ஆனால், சாதாரணக் கண்களுக்குப் புலனாகாது, காற்று வகைகளாய்ப் பிரிந்து விட்டன. எனவே, அந்த மெழுகு வர்த்தியின் மூலப்பொருள்கள் அழிவற்றைவைதாமே? இது ஆய்வாளன் முடிவு; உண்மையும் இதுவே.

தண்ணீரைப் பற்றிய உண்மை இதை நன்கு வெளியாக்கும். சூட்டின் ஓர் அளவிலே ஓடும் தண்ணீரைப் பார்க்கின்றோம்: ஆனால், அதை நிறுத்த முடிவதில்லை. ஆனால், சூட்டின் அளவு குறைந்து அத் தண்ணீரே உறைந்து பனிக்கட்டியாகி விடுமானல், அது கடினப் பொருளாகி, போட்ட இடத்தில் அப்படியே கிடக்கின்றது. சூடு இன்னும் அதிகமானல், ஓடும் நீரே தன் நிலை கெட்டு ஆவியாக மாறிவிடுகின்றது. தண்ணீர் ஆவியாக மாறி மறைந்துவிட்டதாலேயே அது அழிந்துவிட்ட ஒன்று என்று சொல்லிவிட முடியுமா? முடியாதே. பனிக்கட்டியானதாலே தண்ணீர் செத்தது எனக் கூற முடியுமா? முடியாதே. எனவேதான், உலகத்துள்ள இயற்கைப் பொருள் களும், உயிரும், கடவுளை ஒத்து, என்றும் அழியாத நிலையில் வாழ்கின்றன என்கின்றனர் சைவ சித்தாந்திகள். மெழுகுவர்த்தியும் தண்ணீரும் மாறுபட்ட வகைதான் உயிருக்கும் உலகுக்கும். சமய வாதிகள், கடவுளையும் மற்ற இரு பொருள்களையும் பிரித்துக் காட்டுவார்கள். மூன்றும் அழிவற்றன, எனினும், கடவுள் நிலை கெடாது, தன்மை மாறாது எக்காலத்தும் ஒரே வகையில் இருப்பவர். ஆனால், உயிரும் உலகமும் என்றும் அழியாதவையானலும், தம் நிலையும் தன்மையும் கெட்டும், மாறியும் உறழ்ந்தும் பிறழ்ந்தும் வேறு பலவகையாகவும் நிலவுகின்றன. என்பர்.