பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

178

கவிதையும் வாழ்க்கையும்



சமய நெறியில் கண்ட இந்த உண்மை, விஞ்ஞான வழியில் இன்று மெய்ப்பிக்கப் படுகின்றது. உலகமும் உயிரும் நிலை கெடுவன, என்று தோன்றின என அறிய முடியாதன. 'இந்த உலகம் அழியினும் ஐம்பூதப் பொருள்களாக வேறு வழியில் மாறிவிடும்,' என்பது உண்மை. அதைப்போன்றே உயிரும் அழிவற்றது. அது புல்லாயினும், விலங்காயினும், வேறு எதுவாயினும், அன்றி மனிதனே யாயினும், அவ்வுயிர் உடம்பை விட்டு நீங்கின் அழிந்ததாக வைக்காது, நிலை மாறிற்று என்றே கொள்ளல் வேண்டும். அதனாலேதான் உயிர் வளர்ச்சி எக்காலத்தும் தங்குதடையின்றி வளர்ந்து கொண்டே செல்கிறது என்ற முடிவுக்கு ஆய்வாளர் வருகின்றனர்.

தோன்றிய நாள் இன்னதெனத் திட்டமாக அறிய முடியாவிடினும், அந்தத் தோன்றிய நாள் தொட்டே வளர்ந்து வரும் உயிரினத்துக்கு அறிவு உண்டா என்று கேட்கத் தோன்றும், அறிவென்பது மனிதனுக்கு மட்டும் அமைந்த ஒன்றென்றும், மற்றவை எல்லாம் அறிவற்றவை என்றும் கூறுவர். ஆனால், தொல்காப்பியர் ஒவ்வோர் உயிரும் அறிவு பெற்றதே என்றும், அவ்வறிவு மனிதனிடம் ஆறாகவும், சிலவற்றிடம் ஐந்தாகவும். இன்னும் சிலவற்றிடம் நான்கு, மூன்று. இரண்டு, ஒன்றாகவும் அமைகின்றன என்பர். தமிழ் இலக்கணத்தில் இந்த அறிவை ஒட்டியே, திணை வகுத்தார்களோ என்னுமாறு உயர்திணை அஃறிணை என்ற இரண்டையும் பகுத்துள்ளார்கள்.

'உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே,
அஃறிணை என்மனார் அவரல பிறவே.'

எனத் தொல்காப்பியர் சொல்லதிகாரத்திலே இவற்றைப் பிரித்துக் காட்டுகின்றார். மனிதனைச் சுட்டி வருவனவெல்லாம் உயர்திணை எனவும், மற்றவை யெல்லாம் அஃறிணை எனவும் கொள்ளக்கிடப்பன என்பது தெளிவு. மனிதனை உயர்திணையாக்கியதற்கும் அத் தொல்காப்பியமே காரணம் காட்டுகின்றது ஆறாவது அறிவைப் பெற்றவரே மக்களாவர் என விதந்து ஓதுகின்றது. அது.