பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

180

கவிதையும் வாழ்க்கையும்


என்னென்ன வகையில் வளர்ச்சியுற்று வந்துள்ளது என்பதைக் காணின், ஓரளவு உயிர்த்தோற்ற வளர்ச்சி புலனாகும்.

தாவரங்களுக்கு உயிர் உண்டா இல்லையா என்ற ஆராய்ச்சி நெடுங்காலமாகவே உலகில் நடைபெற்று வந்தது. அந்த ஐயத்தைப் போக்கியவர் ஓர் இந்தியரேயாவர். வங்க நாட்டில் பிறந்த ஜகதீஸ் சந்திரபோஸ் அவர்களே நன்கு ஆராய்ந்து மரஞ் செடி கொடிகளுக்கும் உயிர் உண்டு என்பதை நிறுவினார்கள். ஆனல், அந்த உயிரின் அறிவுக் கூறுபாடுகளை அறுதியிடவில்லை என்றே சொல்லலாம். இன்று அத்துறையில் பல ஆய்வாளர்கள் பணியாற்றி மேலும்மேலும் உண்மைகளைக் கண்டுகொண்டே யிருக்கின்றார்கள். தொல்காப்பியர். இந்த நுண்மையை எப்படி அறிந்தாரோ நமக்குத் தெரியாது. எனினும், அவர் திட்டவட்டமாக இன்னின்னவற்றிற்கு இன்னின்ன வகையில், அறிவுக் கூறுபாடுகள் உள்ளன என வரையறுக்கின்றார், அவற்றேடு புல்லுக்கும் மரத்துக்கும் உள்ள வேறுபாடுகளையும் காட்டுகின்றார். வானேங்கிய தென்னையும் மூங்கிலும் மரமா புல்லா என்ற ஐயம் இன்றும் பலருக்கு உண்டு. ஆனால், தொல்காப்பியர் ஒரு நல்ல சட்டத்தின்மூலம் புல் இனம் இவை, மர இனம் இவை என்றே திட்டமாக வரையறை செய்துவிட்டார்.


‘புறக்கா ழனவே புல்லென மொழிப’ (மரபு : 81)
‘அகக்கா ழனவே மரமென மொழிப.’ (௸. 82)

என்ற இரண்டு சூத்திரங்களும் அவற்றின் வேறுபாட்டை நன்கு விளக்குவனவே. வெளிப்புறம் கடினமாய் இருந்து உட்புறம் மென்மையாயுள்ள அடிப்பாகத்தைக் கொண்ட அனைத்தும் புல் இனத்தைச் சேர்ந்தனவாகும். இதன்படி வெளிப்புறத்தே திண்மை உடைய தெங்கும், மூங்கிலும் புல்லினத்தைச் சேர்ந்தவைதாமே? மரத்துக்கு இலக்கணம் அதன் உட்புறம் - திண்மை பெற்றிருக்கும் என்பதே. இப்படி ஒரறிவுடைய உயிரினத்தில் இத்துணை வேறுபாட்டைக் காட்டுகின்றார் தொல்காப்பியர். இன்னும் அடுத்த சில சூத்திரங்களில்