பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

182

கவிதையும் வாழ்க்கையும்




“சுவைஒளி ஊறுஓசை நாற்றம்என் றைந்தின்
வகை தெரிவான் கட்டே உலகு.”

என்று சுருக்கிக் கூறுகின்றார். இக் குறளுக்கு உரை எழுதிய ஆசிரியர் பரிமேலழகர், இவ் வைந்தின் கூறுபாட்டை அறிதலே—இவற்றின் வகையை உற்று உணர்தலே—அனைத்துக்கும் முதலாகிய ஒன்றினையும் அதன் வழியே பூதங்கள் ஐந்தினையும் பிறவற்றையும் அறிந்துகொள்ளுதல் என்கின்றார். அவர் காணும் விளக்கம் நமக்கு இங்குத் தேவையில்லை. எனினும், அவற்றின் இன்றியமையாமையே உலக வாழ்வு என்பதை மட்டும் நாம் மறவாமல் மனத்தில் கொள்ளவேண்டும், இவ்வைந்து சுவைகளை நல்கும். புலன்வழி பெறும் அறிவுகளே தொல்காப்பியர் அறுதியிட்ட அறிவுகளாகும்.

இனி, அவ்வறிவினைப் பெற்ற உயிர்கள் எவ்வெவ்வாறு வளர்ச்சியடைந்து வாழ்கின்றன என்பதையும் காண்போம். ஒவ்வோர் அறிவினையும் பிரித்து, அவ்வறிவின் வழி வாழ்க்கை நடத்தும் உயிர்களை வகுத்துக் காட்டுகின்றார் ஆசிரியர் தொல்காப்பியனார்:


‘புல்லும் மரமும் ஓரறி வினவே,
பிறவும் உளவே அக்கிளப் பிறப்பே.’

‘நந்தும் முரளும் ஈரறி வினவே;
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.’

‘சிதலும் எறும்பும் மூவறி வினவே;
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே’;

‘நண்டும் தும்பியும் நான்கறி வினவே;
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.’

‘மாவும் மாக்களும் ஐயறி வினவே;
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே’.

‘மக்கள் தாமே ஆறறி வுயிரே;
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.’ (மரபு. 18—33)