பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உயிர்த்தோற்ற வளர்ச்சி

183


என ஒரறிவுடைய உயிர் தொடங்கி ஆறறிவுடைய மனிதன் வரை, அவ்வவ்வினத்தைச் சேர்ந்தவற்றை விளக்கியுள்ளார். மேலே கண்ட ‘ஒன்றறி வதுவே’ என்னும் சூத்திரத்தில், ‘நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினர்,’ என்றார். இவ்வாறு ஒன்றுமுதல் ஆறுவரை அமைந்திருந்த காரணத்தை அவருக்கு முன்னரே ஆய்ந்தமைந்த நல்லோர் அறிவுவழி நின்று ஆராய்ந்து, நெறிப்படுத்திக் காட்டினர்கள் என்பதேயாகும். அவர்கள் அவ்வாறு கூறியதற்குக் காரணம் நம்மால் நன்கு விளங்கிக்கொள்ள முடியாது போயினும், அவை ஒன்றை ஒன்று பற்றி வளர்ந்து வளர்வதைக் கண்கூடாகக் காணும் நாம்ஒவ்வோர் அறிவும் வளர வளர, அவ்வுயிர்ப்பொருள்கள் மனிதனை நெருங்கி வருவதைக் காணும் நாம்-அவற்றின் பொருத்தத்தை உணர்ந்துகொள்ளுதல் வேண்டும். மேலும், விளக்கம் வேண்டின், பேராசிரியர் இச்சூத்திர உரையில் கூறியவாறு ‘வல்லார் வாய்க் கேட்டுணர்க’ என்று நாமும் முடிக்கத்தான் வேண்டும். இவற்றின் விரிவு பெருகும். விவிலிய நூலில் கூறும் தோற்றக் கூறுபாடுகளும் சில வகையில் இவற்றை ஒத்திருத்தல் காணலாம்.[1]

இனி, இந்த அறுவகை உயிர்த்தோற்றத்தை ஆராய்வோம். புல்லையும் மரத்தையும் ஓரறிவுடைய உயிராகக் குறிக்கின்றார்: அவற்றோடு கூடிய கிளைப்பிறப்பும் அத்தகையனவே எனவும் காட்டுகின்றார். இதற்கு உரை எழுதிய பேராசிரியர், கிளைப் பிறப்பு என்பது கிளையும் பிறப்பும் என்றவாறு. கிளையென்பன, புறக்காழும் அகக்காழும் இன்றிப் புதலும்கொடியும் போல்வன. பிறப்பென்பன, மக்களானும் விலங்கானும் ஈன்ற குழவி ஓரறிவினவாகிய பருவமும், எஞ்ஞான்றும் ஓரறிவினவேயாகிய என்பில் புழுவும் இவை. இவை வேறு பிறப்பெனக் கொள்க, எனக் குறிக்கின்றார். எனவே, கிளையிலும் பிறப்பிலும் பலவற்றை உள்ளடக்குகின்றார் அவர். விளக்கம் போற்றற் குரியதுதான். புதலும்-முட்புதரும்-கொடி வகையும் தாவர இனந்தான்; அவற்றை அப்பிறவியோடு சார்த்தல் இயல்பு.


  1. GENESIS. Chapter— 1