பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மனித வாழ்க்கை

199


ஆராயத் தொடங்கினானாம். இது கதையாய் இருந்தாலும், வேதாந்திகள் இக் கருத்தைத்தான் அதிகமாக ஆராய்கின்றார்கள். வேதாந்த நூலாகிய கைவல்லிய நவனீதத்திலே இக்கருத்துக்கள் வருகின்றன. இதுபற்றியேதான், ‘உன்னையே நீ எண்ணிப்பாரு; இந்த உலகத்தில் எது சொந்தம்? யோசித்துக் கூறு’ என்ற நாடோடிச் சித்தர் பாடலும் எழுந்தது. இவையெல்லாம் சமயம் பற்றி எழுந்த கருத்துக்கள் என்றாலும், இவை அத்தனையும் இன்று விஞ்ஞான உலகில் உண்மையாகி உள்ளதை நாம் காண்கின்றோம். வேதாந்தி இவற்றைச் சொல்லிவிட்டு அனைத்தையும் பொய்யென்று காலத்தைக் கழிக்கின்றான். ஆனால், விஞ்ஞானி அனைத்தையும் மெய்யென்று அவற்றின் தோற்றக் கூறுபாடுகளை ஆராய்ச்சி செய்கிறான். இதுவே இருவருக்கும் வேறுபாடு. விஞ்ஞானத்தினல் மனிதன் தன்னைப்பற்றி அறியத் தொடங்கினான். மனிதன் எங்கிருந்து வந்தான்? அவன் யார்? அவன் யாரோடு சம்பந்தப்பட்டான்? அவன் அடிப்படை எங்கே? அவன் எதனால் ஆக்கப்பட்டான்? இப்படி ஒன்றன்பின் ஒன்றாகக் கேள்வியை அடுக்கிக்கொண்டே சென்றான் விஞ்ஞானி; கேள்வியை அடுக்கியதோடமையாது தனது ஆய்வுக்களத்தில் அமர்ந்து, அல்லும்பகலும் பாடுபட்டு, அவற்றிற்கு விடைகளையும் காண முற்பட்டான். அதில் அவன் முழுக்க முழுக்க வெற்றி பெற்றுவிட்டான் என்று கூற முடியாவிட்டாலும், தன்னைப்பற்றியும், தன் வரலாற்றைப் பற்றியும், தன் முன்னோடிகளாகிய உயிரினங்களைப் பற்றியும் ஒருவாறு உணர்ந்து கொண்டான். இன்னும் முற்றும் ஆராய்ந்து, முடிவில் குறையற்ற வகையில் தன்னை அவன் உணர்ந்து கொள்வானாயினான். ஒருவேளை அவ் வேதாந்தி கூறியபடி தனக்கு ஒரு கெடுதலும் இன்றி என்றும் நிலைத்திருக்கக் கற்றுக் கொள்வானோ என்று எண்ண வேண்டியுள்ளது. எப்படியாயினும், விஞ்ஞானக் கண்கொண்டு உலகத் தோற்ற முதல் இன்றைய மனித வாழ்வுவரை ஓரளவு வரையறுத்துக் காட்டக்கூடிய நல்ல அறிவுடைய மக்கள் இடையில் நாம் வாழ்வது ஒரு பேறேயாகும்.